தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.. ஆளுநருக்கு 21 தமிழக எம்.பி.க்கள் கடிதம்!

  • சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் முதவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் வழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    Advertisement

    காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 21 எம்.பிக்கள் கூ்ட்டாக இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், "கடந்த ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் பாடப்பட்ட பாடல்களின் வரிசை தமிழ்நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அரசு நிகழ்ச்சிகளை மாநில பாடலுடன் (தமிழ்த்தாய் வாழ்த்து) தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் நீண்டகால மரபை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை தங்களது கவனத்திற்குக் கொண்டுவரும் வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இக்கடிதத்தை எழுதுகிறோம்.

    பட்டமளிப்பு விழாவிற்கு முன்பாக, செய்தியாளர்களிடம் பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், "ஆளுநர் மாளிகையின் அறிவுறுத்தலின்படி, இவ்விழா வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூன்றாவது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 'நீராருங் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலேயே செயல்படுகிறது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழ்நாட்டின் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில், பாடப்பட்டு வரும் இப்பாடல், 2021-ல் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாகவும் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அவரது பெயரிலேயே நடத்தப்பட்டு வரும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது தமிழக மக்கள் நேசிக்கும் ஒரு ஆளுமைக்கும், பல தலைமுறையாக பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை அவமதிக்கும் நோக்காகவே நாங்கள் உணர்கிறோம். தமிழக எம்.பி.க்களாக இந்த விசயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது, எங்களது கடமையாகும்.

    2026 ஜூன் மாதம் சட்டப்பேரவையில் தாங்கள் ஆற்றிய உரை, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதை தமிழக மக்கள் முழுமனதுடன் வரவேற்றனர். ஆனால், இதில் மிகக் குறுகிய காலத்திலேயே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த வரிசை மாற்றம் அந்த மதிப்பை பாதிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஏனென்றால், முதலில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இறுதியாக 'தேசிய கீதம்' இசைக்கும் தமிழகத்தின் நடைமுறை, இம்மாநிலத்திற்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களும் இதேபோன்ற ஒரு மரபை பின்பற்றுகின்றன. இதை பின்பற்றுவதால் தேசிய கீதத்திற்கோ, 'வந்தே மாதரம்' பாடலுக்கோ எந்தவிதக் குறைவும் ஏற்பட்டுவிடாது.

    பல்வேறு மொழிகளையும், பற்றுகளையும் ஒன்றுக்கொன்று மேலானது, கீழானது என தரம் பிரிக்க வேண்டிய அவசியமின்றி, ஒற்றுமையே வலிமை என்று தலைநிமிரும் நாடு இந்தியா.

    எனவே, தமிழ்நாட்டின் மரபுப்படி பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

    Advertisement

    மேலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கோ, மனோன்மணியம் சுந்தரனாரின் பெயருக்கோ எவ்வித அவமரியாதையும் செய்யும் நோக்கம் இல்லை என்பதை தமிழக மக்களுக்கு விளக்க ஒரு உறுதிமொழியையும் நீங்கள் வெளியிட வேண்டும். இது புகார் அல்ல கோரிக்கை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    MPs from Tamil Nadu, including those from the Congress and Communist parties, have written to Governor Arlekar, urging the reinstatement of the practice of singing the 'Tamil Thai Vazhthu' first at university and government events in the state.