தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது!

  • சென்னை: டிஜிபி உத்தரவின்படி தமிழகம் முழுவதும் குற்றவாளிகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,328 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். போதைப்பொருள் தொடர்புடைய 202 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    Advertisement

    கடந்த 28.05.2026 முதல் 10.06.2026 வரை சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் போது 36,740 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,328 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

    ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 01.06.2026 முதல் 10.06.2026 வரை மொத்தம் 2,939 ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அமலாக்கக் குழுக்கள் இந்த சிறப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக சோதனை செய்ததில் 231 கிலோ கஞ்சா, 4,073 போதை மாத்திரைகள், 22.55 கிராம் மெத்தாம்பெட்டமின், 0.006 கிராம் எம்.டி.எம்.ஏ, 362.5 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து அதில் தொடர்புடைய 202 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

    மேலும், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 14 இருசக்கர / மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.

    Advertisement

    மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு, சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், தொடர் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாலியல் பாதுகாப்பு சட்டம் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும்.

    வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்புகள் மூலம் குற்றச் செயல்களை தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் கண்காணிப்பு பணிக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து, தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்க உதவியுள்ளன.

    Advertisement

    இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும். பொதுமக்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu police have stated that, in accordance with the DGP's orders, various intensive measures have been taken against criminals across Tamil Nadu. A total of 1,328 individuals involved in criminal activities were arrested and remanded to judicial custody. 202 offenders linked to drug-related offenses were arrested and remanded to judicial custody.