தமிழ்நாட்டில் அடிக்கடி பவர் கட்.. திமுகவிற்கு ஒரு ஆற்காடு வீராசாமி.. தவெகவிற்கு ஒரு நிர்மல் குமார்?

  • கோவை: தமிழ்நாட்டில் 2000 முதல் 2009-ஆம் ஆண்டு வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவாயின. ஆனால் அதற்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் மக்கள் அடிக்கடி மின்வெட்டுப் பிரச்சினையைச் சந்தித்தனர். இந்தப் பிரச்சினை காரணமாக திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அதேபோல் தற்போது தவெக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் நிர்மல் குமாரும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

    Advertisement

    2000-களுக்குப் பிறகு சென்னையில் டைடல் பார்க், பழைய மகாபலிபுரம் சாலையில் ஐடி காரிடர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்/ஒரகடம் பகுதிகளில் ஹூண்டாய், செயிண்ட் கோபைன் போன்ற ஏராளமான பன்னாட்டு ஐடி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக வேகமாக வேகமாகக் காலூன்றத் தொடங்கின. இதனால் மாநிலத்தின் மின்சாரத் தேவை எதிர்பாராத அளவிற்குப் பெருமளவில் உயர்ந்து கொண்டே சென்றது.

    Advertisement

    அசுர வளர்ச்சி

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மட்டுமல்லாமல் ஓசூர், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் என இன்றைக்குப் பெரிய தொழில் நகரங்களாக உள்ள அனைத்துப் பகுதிகளும் அந்தக் காலகட்டத்தில்தான் அசுரத்தனமாக வளரத் தொடங்கின. ஆனால் தொழில்துறை வளர்ச்சியடைந்த வேகத்திற்குப் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை அரசால் உடனுக்குடன் அமைத்துத் தர முடியவில்லை.

    தொடர் மின்வெட்டு

    இதனால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்படத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் கடும் மின்வெட்டுப் பிரச்சினை உருவானது. கிராமப்புறங்களில் 10 முதல் 12 மணி நேரமும், நகரங்களில் 4 முதல் 6 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படத் தொடங்கியது. இதில் தொழில் மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டடன.

    Advertisement

    ஆற்காடு வீராசாமி மீது விமர்சனம்

    இதனால் 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளானார். இந்தப் பிரச்சினை 2011-இல் ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்ந்தது. எனினும் 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளில் படிப்படியாகச் சரியானது. அதன்பிறகு மின்வெட்டுப் பிரச்சினை பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளாகவே சிறு சிறு மின்தடைகள் இருந்தாலும், அது பெரிய பிரச்சினையாக மாறாமல் ஓரளவு சீராகவே இருந்தது.

    ஆனால் கடந்த மே மாதம் தொடங்கி இந்தப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வழக்கமாக கோடை காலத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் மின் பற்றாக்குறை இருக்கும் என்பதால், அது பெரிய விமர்சனமாக உருவெடுக்கவில்லை. அதேபோல் ஆட்சி மாறிய சமயம் என்பதால் தவெக அரசு மீதும் விமர்சனங்கள் பெரிய அளவில் வரவில்லை.

    Advertisement

    பரவலாக மின்வெட்டு

    ஆனால் ஜூன் மாதம் முதல் விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கின. தற்போது கோடை காலம் முடிந்தும் வெப்பம் குறையாத நிலையில், தேவை அதிகரித்துள்ளதால் மின் பற்றாக்குறை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

    ஏசி பயன்பாடு அதிகம்

    பொதுவாகக் கோடை காலத்தில்தான் மின்வெட்டுப் பிரச்சினை தலைதூக்கும். ஆனால் செப்டம்பர் மாதமான இப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏ.சி., மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. இதனால் மின்சாரப் பயன்பாடு வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. பொதுவாகக் கோடை காலம் முடிந்ததும் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும்.

    Advertisement

    காற்றாலை மின்சாரம் குறைந்தது

    திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர் மற்றும் தேனி உட்படப் பல்வேறு மாவட்டங்களில் காற்றுக் காலமும் தீவிரமடையும். காற்றாலை மின்சாரம் பெரிய அளவில் கைகொடுக்கும். ஆனால் பருவமழை பொய்த்துப்போனது மற்றும் வெப்பநிலை குறையாதது போன்ற பருவநிலை மாற்றங்கள் காரணமாகக் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டது.

    மின்தேவை அதிகரிப்பு

    பருவநிலை மாறுபாட்டால் வெப்பம் அதிகரித்தது ஒருபுறம் என்றால், மின்சாரப் பயன்பாடும் கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாகச் செப்டம்பரில் மக்களின் மின்சாரப் பயன்பாடு பெருமளவு குறைந்துவிடும். ஆனால் தற்போதைய வெப்பம் மற்றும் புழுக்கம் காரணமாகக் கோடை காலத்தைப் போலவே மின்சாரப் பயன்பாடு உச்சத்தில் இருக்கிறது. இதனால் மின்வெட்டுப் பிரச்சினை தமிழகம் முழுவதும் பரவலாக நிலவுவதாக மின்சாரப் பணியாளர்கள் சங்கமும் தெரிவிக்கிறது.

    Advertisement

    ஆற்காடு வீராசாமி போல் நிர்மல்குமார்

    இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மின்தடை நீடிக்கிறது. தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிக இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். நெல்லை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், தேனி, அரியலூர் எனத் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மின்வெட்டுப் பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக, அன்று திமுகவின் ஆற்காடு வீராசாமி விமர்சிக்கப்பட்டதைப் போலத் தற்போது தவெகவின் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாரும் மக்களிடையே கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

    மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

    இந்தப் பிரச்சினை குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியம் அனல் மின் நிலையங்கள் மற்றும் புனல் மின் நிலையங்கள் வாயிலாகச் சுமார் 7,400 மெகாவாட் உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தாலும், அதில் பாதி அளவே உற்பத்தியாகிறது. இதுதவிர மீதமுள்ள மின் தேவைகளை மத்திய அரசு மற்றும் தனியாரிடமிருந்து பெற்றுப் பூர்த்தி செய்து வருகிறோம். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த மின் தேவையை விட விநியோகம் மிகவும் குறைவாக இருந்ததால் மின்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதாவது, 16,194 மெகாவாட் மட்டுமே மின்சாரம் இருந்த நிலையில் 21,724 மெகாவாட்டுக்கு மேல் மின் தேவை ஏற்பட்டது. இதுவே மின்வெட்டுப் பிரச்சினைக்குக் காரணம். இதே நிலைதான் கடந்த 2 நாட்களாக நீடிக்கிறது" என்றனர்.

    அமைச்சர் விளக்கம்

    மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், "காற்றாலை மின்சாரம் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே கிடைத்துள்ளது. சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது. எனவே சந்தையிலிருந்து கூடுதலாக 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டோம். கடந்த வாரம் 2,000 மெகாவாட் பற்றாக்குறை இருந்தது. இப்போது மேலும் 1,500 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. சில இடங்களில் மின் கோளாறு (Power failure) காரணமாகவே தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் வாங்குவது தொடர்பாக நீண்டகால ஒப்பந்தங்கள் வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

    English Summary

    TN Power Cut: History Repeats from DMK’s Arcot Veerasamy to TVK’s CTR Nirmal Kumar? Continuous outages outrage public.