சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மின் தேவையைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டரும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுதவிர, தொழிற்சாலைகளின் மின்தேவையும் அதிகரித்து வருகிறது.
இதனால், மாநிலத்தின் மொத்த மின்தேவையைச் சமாளிப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுவதாகவும், சில இடங்களில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு நீடிப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆவடி பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலையில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மின்தடையால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சென்னை மட்டுமின்றி மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் மின்வெட்டு தொடர்பாகப் புகார்கள் எழுந்துள்ளன. மின்சாரம் எப்போது தடைபடும், எப்போது மீண்டும் வரும் என்பது தெரியாத நிலை இருப்பதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் வீட்டுப் பணிகளை மேற்கொள்வதில் பெண்கள் சிரமப்படுவதாகவும், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் போதிய தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்புகொண்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை என்ற புகார்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், தமிழகத்தின் மின்தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக மின்வாரியம் டெண்டர் கோரியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தன. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரத் தேவையை ஈடுகட்டவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதன் மூலம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.Power Cut: தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு! இருளில் மூழ்கிய செங்கோட்டையன், ஆதவ் அறைகள்!
பவர்கட் பஞ்சாயத்து இனி இல்லை.. தமிழகத்தில் பேட்டரி ’எனர்ஜி ஸ்டோரேஜ்’ திட்டம்! அமைச்சர் குட் நியூஸ்!