சென்னை: தமிழ்நாட்டில் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 6.81% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக பணவீக்கம் கொண்ட மாநிலங்களில் புதுச்சேரிக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கமும் ரிசர்வ் வங்கியின் 6% உச்ச வரம்பை நெருங்கியுள்ளது.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் நேற்றைய தினம் இந்தியாவில் பதிவான புள்ளி விவரங்கள் குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டு இருந்தது. நாட்டில் எவ்வளவு பணவீக்கம் நிலவுகிறது என்பதை பொறுத்தே வட்டி விகிதம் உட்பட அனைத்தும் முடிவு செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் இதை உற்று கவனித்தே வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் மத்திய புள்ளியியல் அமைச்சகம் பணவீக்கம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4.83%ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 5.54%ஆக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் உணவு பணவீக்கம் 5.97%லிருந்து 7.74% ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை புதுச்சேரியில் தான் பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது. அங்கு பணவீக்கம் அதிகபட்சமாக 6.86%பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 6.81% பணவீக்கம் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் 6.70%, மத்திய பிரதேசத்தில் 6.68%, தெலுங்கானாவில் 6.64% பணவீக்கம் பதிவாகியுள்ளது. உணவு பொருட்களில் வெங்காயத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு செப்டம்பரில் வெங்காயத்தின் பணவீக்கம் 108.09% அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இது 48.78%ஆக இருந்தது. இதேபோல் இஞ்சியின் விலை கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 62.85% உயர்ந்துள்ளது. பூண்டின் பணவீக்கம் 54.62% ஆகவும், எலுமிச்சையின் பணவீக்கம் 36.41% ஆகவும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் எலுமிச்சையின் பணவீக்கம் 15.15% ஆக இருந்தது. வெள்ளி நகைகளின் பணவீக்கம் 87.80% ஆகப் பதிவாகியுள்ளது. இந்தாண்டு நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.24% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 6.08% ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 4.31%லிருந்து 4.88%ஆக அதிகரித்துள்ளது. கிராமப்புற உணவு பணவீக்கம் 8.06% ஆகவும், நகர்ப்புற உணவுப் பணவீக்கம் 7.18% ஆகவும் உள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் ஒரே மாதிரியாக உயரவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது உருளைக்கிழங்கு விலை 11.50% குறைந்துள்ளது. தக்காளி விலை 8.62% சரிந்துள்ளது. மோட்டார் கார்கள் மற்றும் ஜீப்புகளின் விலை 4.51% குறைந்துள்ள நிலையில், வெண்டைக்காய் விலை 4.48%, தேங்காய் விலை 3.99% சரிந்துள்ளது. உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் 9.36% பணவீக்கம் பதிவாகியுள்ளது. தனிநபர் பராமரிப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் இதர பொருட்கள், சேவைகள் பிரிவில் விலை உயர்வு 13.75% ஆக உள்ளது. சுகாதாரப் பிரிவில் பணவீக்கம் 1.40% ஆகவும், வீடு, தண்ணீர், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பிரிவுகளில் 2.74% ஆகவும் உள்ளது. 2024 அடிப்படை ஆண்டை கொண்ட கணக்கிடப்பட்ட பணவீக்கத்தில் இந்த செப்டம்பர் மாத பணவீக்கமே அதிகபட்சமாகும். ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தான் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 5.50%ஆக நிர்ணயம் செய்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை. அடுத்து டிசம்பர் மாதம் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த பணவீக்க டேட்டா எல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது.சில்லறை பணவீக்கம்
தமிழ்நாடு மோசம்
உணவு பொருட்கள்
விலை குறைந்த பொருள்கள்
ரிசர்வ் வங்கி