ஏர்போர்ட் மட்டுமல்ல.. மதுரை, நாகர்கோவில் பாதாள சாக்கடை திட்டத்தையும்.. தனியாரிடம் தர விஜய் முடிவு

  • சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த தவெக அரசு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.

    Advertisement

    சென்னை சர்வதேச விமான நிலையத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து மாற்றி, புதிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலேயே அனுப்பிவிட்டு, இத்தனை நாட்களாக வெளிப்படையாக அறிவிக்காமல் அரசு ரகசியமாக வைத்திருந்தது ஏன் என்ற கேள்விகள் தற்போது வலுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள், இடதுசாரி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த நடவடிக்கை கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு இடையே மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த தவெக அரசு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.

    தமிழகத்தில் செயல்படும் அனைத்து மாநகராட்சிகளும் நகராட்சி நிர்வாகத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் போன்ற அடிப்படை சுகாதாரப் பணிகளை அந்தந்த மாநகராட்சிகளே நேரடியாகக் கவனித்து வருகின்றன.

    Advertisement

    அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியிலும் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்க முந்தைய திமுக ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், புதிய அரசு அந்த திட்டத்தை தனியார் நிறுவனத்திற்கே வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, குடிநீரைத் தொடர்ந்து தற்போது கழிவுநீர் மேலாண்மை மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களையும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்துள்ளது.

    முதற்கட்டமாக மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நகரங்களிலும் பாதாள சாக்கடை உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், விடுபட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யவும் ஏற்கனவே திட்ட அறிக்கைகள் விரிவாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரை, பழைய பாதாள சாக்கடை குழாய்களைப் புதுப்பித்தல், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய குழாய்கள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த முழு திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.2,377.48 கோடி ஆகும்.

    நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை வசதி இல்லாத விரிவாக்கப் பகுதிகளில் ரூ.189.82 கோடி செலவில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 111 கி.மீ. தூரத்திற்கு புதிய கழிவுநீர் குழாய்களும், 19.93 கி.மீ. தூரத்திற்கு கழிவுநீர் உந்து குழாய்களும் (Pumping Mains), தேவையான இடங்களில் உந்து நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

    Advertisement

    இப்பணிகளை தனியார் பங்களிப்புடன் எவ்வாறு திறம்படச் செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUDFSL) தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம் ஐந்து மாதங்களுக்குள் சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், மதுரை மற்றும் நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் கோரப்படும். அதில் வெற்றி பெறும் தனியார் நிறுவனமே கட்டுமானப் பணிகளையும் பராமரிப்பையும் நேரடியாகச் செயல்படுத்தும்.

    முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 33 சதவீத தனியார் அல்லது மக்கள் பங்களிப்புடன் சில உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஒரு மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டம் முழுவதும் முழுமையாகத் தனியார் வசம் செல்வது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.

    Advertisement

    மதுரை மற்றும் நாகர்கோவிலில் செயல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், தமிழகத்தின் பிற மாநகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டங்களை படிப்படியாகத் தனியார் பங்களிப்போடு கொண்டு செல்ல விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலைய விவகாரத்தைத் தொடர்ந்து, நகர்ப்புற அடிப்படை சேவைகளிலும் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பரவலான விமர்சனத்தை பெற்றுள்ளது.

    English Summary

    Tamil Nadu Ropes in Private Sector for Mega Drainage Projects in Madurai and Nagercoil