சென்னை: காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
தடையை மீறி வகுப்புகள் நடத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறையின்போது மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறையில், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் தான் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அரசு பள்ளிகளில் இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது.