சென்னை: சென்னையில் தமிழக தலைமைச் செயலகம் வெளியே இன்று காலை 11 மணியளவில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. துர்நாற்றத்துடன் பரவிய புகையால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர். துறைமுகம் அருகேயுள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து புகை பரவி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக தலைமைச் செயலகம் உள்ளது. இங்கு தினமும் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். இது போக தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தலைமைச் செயலகம் அருகே புகைமூட்டம் ஏற்பட்டது. மேலும் அந்த புகைமூட்டம் துர்நாற்றம் வீசும் அளவுக்கு இருந்தது. இதனால் அப்பகுதிகளில் நின்றிருந்த பொதுமக்கள், காவல்துறையினர், வாகன ஓட்டிகள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த புகை எங்கிருந்து வருகிறது என்று தெரியாததால் பலரும் திகைத்தனர். தலைமைச் செயலகம் அருகே ஏற்பட்ட இந்த திடீர் புகை காரணமாக அப்பகுதியில் இருந்தவர்கள் கடும் அவதியடைந்தனர். வெள்ளை நிறத்திலான புகைமூட்டமாக அப்பகுதிகளில் படர்ந்து காணப்பட்டது. சுவாசிக்க கூட முடியாத அளவுக்கு கண் எரிச்சலுடன் கூடிய புகைமூட்டம் நிலவியதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். பட்டாசு வெடித்தால் கூட இப்படி ஒரு நெடி வராதே.. என்ன இப்படி புகையாக இருக்கு.. எங்கும் தீ விபத்து ஏற்பட்டது போல் தெரியவில்லையே? என மக்கள் பேசியதை பார்க்க முடிந்தது. மேலும் சில நெடி தாங்க முடியாததால் கர்சிப் கொண்டு மூக்கை மூடியவாறே சென்றனர். இருமல் இருந்ததாகவும், தொண்டை எரிச்சல், கொசு மருந்து வாசனை வந்ததாகவும் அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். சுமார் அரை மணி நேரம் இப்படி இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தலைமைச் செயலகம் அருகே உள்ள துறைமுகத்தில் இருந்து தான் இந்த புகை வந்தது என தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை துறைமுக அதிகாரிகளிடம் விசாரித்த போது தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்தனர். தொடர்ந்து கூறிய அதிகாரிகள், "வெயில் காரணமாக துறைமுக வளாகத்தில் இருந்த சல்பர் ரசாயனத்தில் இருந்து வாயு வெளியேறி இருப்பதாக தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே துறைமுக வளாகம் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.