டாஸ்மாக் மதுபானம் ரேட் ஏற போகுது? எக்ஸ்ட்ரா பணம் தரணும், ஆனால்.. அமைச்சர் விக்னேஷ் முக்கிய தகவல்

  • சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 10 ரூபாய் உயர்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதற்கிடையே புதிதாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை என கூறியுள்ள மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், பாட்டில்களை திரும்ப அளிக்கும் போது இந்த 10 ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தரப்படும் என தெரிவித்தார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்படும் நிலையில், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மதுபானங்கள் விலை உயர்வதாக இணையத்தில் தகவல் பரவியது. சுற்றுச்சுழல் வரி என்று கூடுதலாக வரி விதிக்கப்படுவதாகவும் இதன் மூலம் மதுபான விலை ரூ.10 உயர்வதாகவும் தகவல்கள் பரவின. இதற்கிடையே தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    ரூ.10 உயர்வு?

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த ஆட்சியில் ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தார்கள். அதாவது ஒரு மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ₹140ஆக இருக்கும் போது, கூடுதலாக ₹10 கொடுத்து பாட்டிலை வாங்கிவிட்டு, காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் அந்த ₹10ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று பாட்டில்களை சேகரித்து வந்தார்கள். ஆனால், அந்த பணத்தை கணக்கில் வராமல் தனியாக ரொக்கமாக கையாண்டு வசூலித்து வந்தார்கள்.

    அரசு சார்ந்த ஒரு துறையில் கணக்கிற்குள் வராமல் தனியாக பணத்தை பெற்றுப் பண பரிவர்த்தனை செய்வது என்பது தவறான முன்னுதாரணம். எந்த பண வரவு-செலவாக இருந்தாலும் அது அரசின் கணக்கில்தான் வர வேண்டும். தனிநபர்களின் கைகளுக்கு அந்த பணம் செல்லக்கூடாது. இந்த குழப்பங்களை தடுக்கவே இப்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    Advertisement

    குழப்பம் இருக்காது

    இனிமேல் ₹140 + ₹10 என்று தனியாக வாங்கும் குழப்பங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, 'சுற்றுச்சூழல் வரி' என்ற பெயரில் அந்த ₹10ஐயும் சேர்த்து, எம்ஆர்பி விலையாகவே ₹150 என அச்சிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.. எனவே, எம்ஆர்பியில் என்ன விலை உள்ளதோ, அதை மட்டும் பொதுமக்கள் கொடுத்தால் போதும். இதன் மூலம் விலை உயர்ந்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை. வாடிக்கையாளர்கள் காலி பாட்டிலை திருப்பிக் கொடுக்கும் போது, அந்த ₹10 அவர்களுக்கு நேரடியாக திரும்ப வழங்கப்படும்.

    கடந்த ஆட்சி காலத்தில் 99% காலி பாட்டில்கள் திரும்ப வந்துவிட்டதாக கணக்கு காட்டினார்கள். ஆனால், இதில் சந்தேகம் இருந்தது. இதையடுத்து நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மூன்று கடைகளில் மாதிரி அடிப்படையில் சோதனை நடத்தினோம். அதில் வெறும் 55% முதல் 60% பாட்டில்கள் மட்டுமே திரும்ப வருகின்றன. 40% பாட்டில்கள் திரும்ப வருவதே இல்லை என்பது தெரியவந்தது.

    Advertisement

    ரூ.1600 கோடி

    இந்த ₹10 விவகாரத்தில் மட்டும் மாதத்திற்கு சுமார் ₹300 கோடி பண புழக்கம் உள்ளது.. ஆண்டுக்கு ₹3,600 கோடி. இதில் 40% பாட்டில்கள் திரும்ப வராத போது, மாதத்திற்கு ₹120 கோடி முதல் ₹140 கோடி வீதம், ஆண்டுக்கு ₹1,200 கோடி முதல் ₹1,600 கோடி வரை பணம் எங்கே போகிறது என்றே தெரியாத நிலை இருந்தது. இதில் நாங்கள் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை.. ஆனால் அந்த பணம் அரசுக்கு வர வேண்டிய பணம். இப்போது எம்ஆர்பி விலையிலேயே சேர்க்கப்பட்டுவிட்டதால், அந்த பணம் நேரடியாக அரசின் கஜானாவுக்கு வந்துவிடும்.

    Advertisement

    சீரமைப்போம்

    இனி பாட்டில்களை கொடுக்கும் போதும், திரும்ப பெறும் போதும் ஸ்கேன் செய்யும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹1,000 கோடிக்கும் அதிகமான தொகை அரசின் கணக்கிற்குள் கொண்டுவரப்படும். மதுவிலக்கு துறையை சீரமைப்பதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த துறையை வளர்ப்பது எங்கள் அரசின் நோக்கமல்ல என்பதையும் திட்டவட்டமாகப் பதிவு செய்கிறேன்" என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

    English Summary

    Tamil Nadu Minister Vignesh has clarified that TASMAC liquor prices are not actually increasing from November 1(மதுபான விலை உயர்வு குறித்து டாஸ்மாக் அமைச்சர் விளக்கம்): Tamil Nadu TASMAC Price Hike latest news in tamil.