சென்னை: விஜய் தமிழ்நாட்டு முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து பல துறையினர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். முதல்வரை சந்திக்கும் பெரும்பாலான தொழிற்துறையினர் முந்தைய ஆட்சியின் கொள்கை தொடர்ச்சியை தான் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளனர். இதேவேளையில் சில துறையினர் முக்கிய மாற்றங்கள் நடக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதில் முக்கியமாக தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட டிக்கெட் விலையை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முதல்வர் விஜய் சினிமா துறையில் இருந்து வந்திருக்கும் காரணத்தால் இந்த முக்கிய கோரிக்கைக்கு எத்தகைய முடிவை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இந்த சந்திப்பில் திரையரங்கு தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய தீர்வுகள் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், ஒவ்வொரு திரைப்படத்தின் தரம் மற்றும் செலவுக்கு ஏற்றவாறு டிக்கெட் விலையை 250 ரூபாய்க்குள் மாற்றிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள், தற்போது 188 ரூபாயாக உள்ள டிக்கெட் விலையை 200 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த உயர்வு திரையரங்குகளின் இயக்க செலவுகளை ஈடுகட்ட உதவும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் உள்ளூர் பொழுதுபோக்கு வரியை முழுமையாக நீக்க வேண்டும், திரையரங்குகளை புதுப்பிக்க அனுமதி வழங்கும் ஜி-ஃபார்ம் அனுமதியை எளிதாக்க வேண்டும் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த கோரிக்கைகள் தமிழ்நாட்டில் திரையரங்கு தொழிலை நீண்டகாலம் தக்கவைக்கவும், தரமான பொழுதுபோக்கை மக்களுக்கு வழங்கவும் உதவும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கினர். முதலமைச்சர் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாக கேட்டறிந்து, தேவையான கருத்துக்களை பெற்று, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார். டிக்கெட் விலை உயர்ந்தால் சாமானிய மக்கள், குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் மக்களும், ரசிகர்களுக்கும், இந்த விலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே OTT தளம் திரையரங்கு வர்த்தகத்தை பாதித்து வரும் வேளையில் இந்த கட்டண உயர்வு மக்கள் வருகையை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. திரையரங்குகள் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே புதிய படங்களை தரமான முறையில் அனுபவிக்க முடியும் என்ற அடிப்படையில் திரையரங்குகள் சங்கம் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.முக்கிய சந்திப்பு
கட்டண உயர்வு
வரி நீக்கம்
முதல்வர் விஜய்