விஜய் கையில் எடுக்கும் 10 ஆண்டு மாஸ்டர் பிளான்.. இனி நீங்கள் பயணம் செய்யும் முறையே அடியோடு மாறும்!

  • சென்னை: தமிழ்நாட்டில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த, அடியோடு மாற்ற புதிய மாஸ்டர் பிளான் ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை முடுக்கிவிடும்படி முதல்வர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    Advertisement

    தமிழக அரசின் புதிய செயல் திட்ட அறிக்கையின் மூலம் இந்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி.. தமிழகத்தின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு பிரம்மாண்ட 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் விஜய் இந்த அறிக்கையை நேரில் கண்காணிப்பார் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    விஜய் கையில் எடுக்கும் மாஸ்டர்பிளான்

    முதல்வர் விஜய் தலைமையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றும் தொலைநோக்கு பார்வையுடன் 'வெற்றித்தமிழகம்' என்னும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வரக்கூடிய அனைத்துப் பணிகளும் கால நிர்ணயம் செய்யப்பட்டு, மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.

    முதல் கட்டம்: முதலாம் ஆண்டு திட்டங்கள்

    இரண்டாம் கட்டம்: 1 முதல் 3 ஆண்டுகளுக்கான திட்டங்கள்

    மூன்றாம் கட்டம்: 3 முதல் 5 ஆண்டுகளுக்கான திட்டங்கள்

    இந்த திட்டங்களின் அடிப்படையில்தான் தற்போது நெடுஞ்சாலை மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட உள்ளது.

    Advertisement

    நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

    வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வதற்காக, முதலமைச்சர் விஜய் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டங்களில், தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் நிலை குறித்தும், எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த வகையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் விபத்துகளற்ற பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை உறுதி செய்ய பாதுகாப்பான சாலைகள் என்ற திட்டத்தின் கீழ் ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    Advertisement

    களமிறக்கப்படும் ஏஐ தொழில்நுட்பம்

    இதன் மூலம், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகள் சாலைகளில் நிறுவப்படும். மேலும், விபத்து காலங்களில் உடனடி சிகிச்சை அளிக்க அவசர மருத்துவப் பராமரிப்பு மையங்களும் அமைக்கப்படவுள்ளன.

    ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள 'நம்ம சாலை' மொபைல் செயலி முற்றிலும் மேம்படுத்தப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகம், இதர அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு சாலைகளில் உள்ள பள்ளங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, அவை உடனுக்குடன் சீரமைக்கப்படும். இதற்காக, சாலைப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ₹2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பெருநகர போக்குவரத்து மற்றும் முக்கிய சாலைத் திட்டங்கள்

    தமிழகத்தின் மிக முக்கியப் போக்குவரத்துத் திட்டமான சென்னை - கன்னியாகுமரி 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து விரைந்து செயல்படுத்த மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும். மேலும், சென்னை நகரின் முக்கிய நான்கு நுழைவு மற்றும் வெளியேறும் சாலைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

    மறுபுறம், ₹1,07,487 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 'மாநில கடல்வழிப் போக்குவரத்து மாஸ்டர் பிளான்' ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு நகரத்திற்கும், நாகப்பட்டினத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்கும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை இயக்குவது குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகள் வாரியத்தின் ஒப்புதலுக்குப் பின் நடத்தப்படும்.

    Advertisement

    ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரம் தீவைச் சுற்றி கடலோரப் படகு போக்குவரத்தைத் தொடங்கவும், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் புதிதாக 3 நவீன பயணிகள் படகு சேவைகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும், காட்டுப்பள்ளி துறைமுகம் ஒரு புதிய தொழிற்துறை துறைமுகமாக மேம்படுத்தப்படும். சென்னை மற்றும் புதுச்சேரி இடையே சுற்றுலாப் படகு சேவை தொடங்குவது குறித்தும், நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்துவது குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    English Summary

    Tamil Nadu to get its first biggest transport and roadways masterplan: Vijay plans big