சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்கும் நடவடிக்கை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்களின் மனச்சுமையும் குறையும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் கல்வி இப்போது முதல் மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை மையமாக வைத்து கல்வி மாறப்போகிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கல்வி அளிப்பதோடு, பெற்றோரை மதிக்கும் வகையில் கல்வித் திட்டமாக அமைக்கப்படும.்
கணிதத்தைப் புரிந்து கொள்வதற்கு மிகுந்த சிரமமாக எனக்கு இருந்தது. அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இரவு பகலாக கல்வியாளர்கள் வேலை பார்த்து மாற்றியுள்ளனர். மாணவர்களுக்கு எளிதில் கணிதம் புரியும் வகையில், ஒவ்வொரு கணிதமும் கதையின் வழியில் கற்றுக் கொடுக்கப்படும். கணிதத்தை கற்கும்போதே இனிமையான அனுபவமாக மாற்றும் வகையில், கதைகளின் வழியே கணிதப் பாடம் நடத்தப்படும். புத்தகப்பை சுமை இனி குறைக்கப்படும். அப்போது மாணவர்களின் மனச்சுமையும் குறையும். பாடப் புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும். புத்தகத்தில் வண்ணப் படங்கள் அதிகமாக்கப்படும். அந்த வண்ணப் படங்கள், குழந்தைகளுடன் பேசும். அதில் ஒரு கியூஆர் கோடு இருக்கும். அதை ஸ்கேன் செய்து பார்த்தால், அது காணொளியாக மாறும். ஏஐ தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். ஏஐ பற்றி யாரும் அச்சப்பட வேண்டாம். அது ஒருபோதும் நமது வேலையைப் பறிக்காது. தகுதி, திறமையை வைத்துமட்டும் தான் ஆசிரியர்கள் உள்ளே வர முடியும். ஒவ்வொரு பள்ளியிலும் செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவிக்கப் போகிறோம். கல்வித் துறையில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.