“அம்மா மினி கிளினிக்” வேறு பெயரில்? பட்ஜெட்டில் அறிவிப்பாம்.. அமைச்சர் அருண்ராஜ் கொடுத்த அப்டேட்!


  • சென்னை: தமிழகத்தில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மருத்துவ சேவையை மேலும் எளிதாகக் கொண்டு செல்லும் நோக்கில், மாலை நேர மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், உயர் சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு மற்றும் சிறப்பு வார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்து நேரடியாக கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    Advertisement

    அப்போது பேசிய அமைச்சர் அருண்ராஜ், "தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 'நலம் AI' வாட்ஸ்அப் சேவை மூலம் இதுவரை சுமார் 1.25 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வழி புறநோயாளர் முன்பதிவு முறையை பயன்படுத்தி 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனையை எளிதாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

    மேலும், மருத்துவக் கல்வி தொடர்பாகவும் அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டை தற்போதைய அளவிலிருந்து 10 சதவீதமாக உயர்த்தும் வாய்ப்பு இருந்தால், அதுகுறித்து முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

    Advertisement

    மேலும், பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் மாலை நேரங்களில் செயல்படும் மினி கிளினிக்குகளை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான விரிவான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. பின்னர், திட்டமிடல் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அவை திமுக ஆட்சியில் செயல்பாட்டில் இல்லை. தற்போது அந்த சேவையை புதிய வடிவில் மீண்டும் கொண்டு வர தவெக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    English Summary

    Health Minister Arunraj has announced that evening mini-clinics will be relaunched in Tamil Nadu with the aim of making medical services more easily accessible to the poor and underprivileged. He also stated that the announcement regarding this initiative will be made in the upcoming budget.