பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக இருந்த தமிழக இளைஞர்! 23 ஆண்டுகள் கழித்து தாயை சந்தித்த நெகிழ்ச்சி

  • சென்னை: பாகிஸ்தான் எல்லையில் இருந்து 23 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த தமிழக இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் பூமாலைப்பட்டி ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி- சுந்தரி தம்பதி. இவர்களுக்கு பிரகாஷ், பிரபு என இரு மகன்கள் உள்ளனர்.

    Advertisement

    கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் குடும்பத்துடன் பிழைப்புக்காக கோயமுத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் குடிபெயர்ந்தனர். இவர்களது மகன் பிரகாஷ் கவுண்டம்பாளையம் நகராட்சி பள்ளியிலும், பிரபு, சாய்பாபா காலனி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு பெற்றோருடன் ஏற்பட்ட சிறிய மனக்கசப்பால் பிரகாஷ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம். அவரை ஊர் முழுக்க, உறவினர்களின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் 2 மாதங்கள் கழித்து தனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்த பிரகாஷ், சென்னையில் இருப்பதாக தெரிவித்தாராம். அதன் பிறகு பிரகாஷை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாம். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அவர் இறந்திருப்பார் என நினைத்து விட்டார்களாம்.

    Advertisement

    இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 1 ஆம் தேதி யாரோ சுந்தரியை தொடர்பு கொண்டு, "உங்கள் மகன் பிரகாஷ் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு காப்பகத்தில் இருக்கிறார்" என தெரிவித்தாராம்.

    இதையடுத்து தனது மகன் உயிருடன் இருப்பதை அறிந்த அவரது தாய், தந்தை பிரகாஷை கோவைக்கு அழைத்து வர முடிவு செய்தனர். இதையடுத்து பஞ்சாப்பில் உள்ள காப்பகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பிரகாஷை அனுப்ப முடியாது என தெரிவித்தனராம்.

    இதனால் கோவையில் உள்ள பள்ளியில் பிரகாஷ் பயின்ற ஆவணங்களை மீட்க மாவட்ட ஆட்சியரை சுந்தரி அணுகினாராம். இதையடுத்து ஆட்சியரும், பஞ்சாப்பில் இருந்து பிரகாஷை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக வாக்களித்தாராம்.

    Advertisement

    இதையடுத்து அந்த காப்பகங்கள் கேட்ட ஆவணங்களை ஆட்சியர் அலுவலகம் அனுப்பிய நிலையில் கடந்த 27ஆம் தேதி பஞ்சாப்பில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தன்னார்வலர்களுடன் சென்ற தமிழ்ச் சங்கத்தினர் அங்கு பிரகாஷை மீட்டனராம்.

    இதையடுத்து அவர் கோவைக்கு அனுப்பப்பட்டார். 23 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகனை பார்த்த தாய் சுந்தரி, அவரை கட்டி பிடித்து கண்ணீர் விட்டார்.

    அவரிடம் நடந்தது என்ன என கேட்ட போது, வீட்டை விட்டு வெளியேறிய போது பிரகாஷுக்கு வேலை வாங்கித் தருவதாக அவரை வடமாநிலத்திற்கு அழைத்து சென்ற புரோக்கர் ஒருவர், பாகிஸ்தான் எல்லையில் ஒரு பண்ணையில் கொத்தடிமையாக விற்றுவிட்டாராம்.

    Advertisement

    அங்கு அவர் தப்பியோடாமல் இருக்க இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு, ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து மிகவும் கொடுமை செய்து வந்தனராம். கொத்தடிமையாக இருந்த தமிழ் பேசும் இளைஞர் மீட்கப்பட்டு அவர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்த தமிழ்ச் சங்கத்தினர், அந்த இளைஞரிடம் போய் விசாரித்த போது எந்த தகவலையும் சொல்லாமல் குழம்பிய நிலையில் இருந்தாராம்.

    இதையடுத்து சில நாட்கள் கழித்து அவரை சந்தித்த போது தனது சொந்த ஊர் விருதுநகர் என தெரிவித்தாராம். அதன் பின்னர் இளைஞர் குறித்து சமூக ஆர்வலர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் சுந்தரி என்பவர் அடையாளம் காணப்பட்டு இன்று அவரிடம் பிரகாஷ் ஒப்படைக்கப்பட்டார். 23 ஆண்டுகள் கழித்து தாயும் மகனும் ஒன்று சேர்ந்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Tamil nadu man who was missing 23 years ago held in captivity near Pakistan border resued safely and handover to his family.