சென்னை: "திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் காடாக மாறிவிட்டது, இளைஞர்களின் எதிர்காலம் அழிந்துவிட்டது" என்று தேர்தல் மேடைகளில் ஆவேசமாகப் பேசியது தமிழக வெற்றிக் கழகம். போதை வழக்கில் ஜாபர் சாதிக் கைதானபோது, அன்றைய ஆளும் தலைமை மற்றும் குடும்பத்தினரை நேரடியாகத் தாக்கிப் பேசிய விஜய், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போதையை அடியோடு ஒழிப்போம்" என முழங்கினார். அந்த வாக்குறுதியை நம்பி ஆட்சிப் பொறுப்பை மக்கள் தவெகவிடம் ஒப்படைத்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தவெகவின் உண்மை முகம் தமிழக மக்கள் முன் அப்பட்டமாகத் தோலுரிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் தவெக கீழ்வேளூர் நிர்வாகி பூபாலனிடம் 137 கிலோ மெத்தம்பேட்டமைன் (Meth) பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை மட்டுமே காட்டி, "இது ஏதோ ஒரு கீழ்மட்ட நிர்வாகியின் தனிப்பட்ட செயல்" என தவெக தப்பிக்கப் பார்த்தது. ஆனால், தவெகவின் போதைப்பொருள் தொடர்புகள் ஆழமான வேர்களைக் கொண்டவை என்பதை ஆதாரங்களோடு ஊடகங்கள் முன் அம்பலப்படுத்தியுள்ளார் திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.பரந்தாமன்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் நடப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியா அல்லது 'Drugs வெற்றிக் கழகத்தின்' (DVK) ஆட்சியா?" எனக் கேட்டு ஒட்டுமொத்த தமிழக அரசியலையே உலுக்கியுள்ளார். திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆதாரங்களுடன் வெளியிட்ட பட்டியல் தமிழக மக்களை உறைய வைத்துள்ளது: 1. அமைச்சர் சரத் வீடியோ சர்ச்சை: ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் தவெகவின் அமைச்சரான சரத்குமார் செல்போன் திரையில் சந்தேகத்திற்குரிய வெள்ளை நிறப் பொடியைப் பயன்படுத்திய காட்சி வெளியாகிப் பெரும் புயலைக் கிளப்பியது. 2. திருப்பூரில் 100 கிலோ கஞ்சா: திருப்பூர் மாவட்ட தவெக நிர்வாகி பெரியசாமியிடம் இருந்து 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3. ஈரோட்டில் 140 கிலோ குட்கா: ஈரோடு பவானியில் தவெக நிர்வாகி அருணிடம் 140 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 4. சங்ககிரியில் 12.5 கிலோ கஞ்சா: சங்ககிரியில் தவெக நிர்வாகி பூபதியிடம் 12.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டது. 5. வீட்டு மாடியில் கஞ்சா செடி: வண்ணாரப்பேட்டையில் சாதாரண மக்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பார்கள்; ஆனால் தவெக நிர்வாகி எட்வின் ராஜ் தன் வீட்டு மாடியிலேயே கஞ்சா செடிகளை வளர்த்து பிடிபட்டார். 6. ஆகஸ்ட் மாத மெகா கைது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மெத் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 6 தவெக நிர்வாகிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். 7. மதுரையில் குட்கா விவகாரம்: மதுரையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி காசிநாதன் கைது செய்யப்பட்டார். 8. குட்கா பாஸ்கருக்கு தவெகவில் அடைக்கலம்: அதிமுகவில் குட்கா வழக்கில் தொடர்புடைய குட்கா பாஸ்கரை தவெகவில் இணைத்துக் கொண்டு அவருக்குக் கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டது. 9. உச்சகட்டமாக 137 கிலோ மெத்: அனைத்திற்கும் உச்சமாக, நாகப்பட்டினத்தில் தவெகவின் தேர்தல் பொறுப்பாளர் பூபாலனிடம் சுமார் ₹300 கோடி மதிப்புடைய 137 கிலோ மெத்தம்பேட்டமைன் கொடிய போதைப்பொருள் மத்திய புலனாய்வு அமைப்பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்சியிலிருந்து ஏதோ ஒருவர் வழிதவறிப் போனால் அதை தனிநபர் தவறு என்று சொல்லலாம். ஆனால் கஞ்சா, குட்கா, சிந்தடிக் மெத் எனத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்துக் கையும் களவுமாகப் பிடிபடுவது எதைக் காட்டுகிறது? வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்ப்பது, குட்கா வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை கட்சியில் சேர்ப்பது, நூற்றுக்கணக்கான கிலோ போதைப் பொருட்களைக் கடத்துவது எனத் தொடர்ந்து நடந்திருக்கும் 9 சம்பவங்களும் தவெக நிர்வாகிகளோடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, மெத் வழக்கில் கைதான பூபாலனுடன் தவெக தலைவர் விஜய் மிகவும் நெருக்கமாகத் தோளோடு அணைத்துக் கட்டிப்பிடித்திருந்த புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. "அவர் யார் என்றே தெரியாது" என்று தவெக தலைவர்கள் கூறிய நாடகத்தை அந்தப் புகைப்படம் உடைத்தெறிந்தது. "இளைஞர்களைப் போதைப்பாதையில் இருந்து மீட்பேன்" என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய், தன் சொந்தக் கட்சியினர் போதை மாஃபியாக்களாக அடுத்தடுத்துச் சிக்கும்போது வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? போதைப்பொருள் தடுப்புக்காக ஒதுக்கப்பட்ட ₹264 கோடி நிதி என்ன ஆனது? அமைக்கப்பட்ட சிறப்புப் படை என்ன நடவடிக்கை எடுத்தது? தேர்தல் செலவுகளுக்கும் கட்சி வளர்ச்சிக்கும் இதுபோன்ற கடத்தல் நபர்களின் கறுப்புப் பணம்தான் பயன்படுகிறதா என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அரசிடம் என்ன பதில் இருக்கிறது மாநாடுகளில் "நண்பா, நண்பீஸ்" என்று பேசி இளைஞர்களை மயக்கிய விஜய், அவர்களின் வாழ்க்கையை விஷமாக்கும் தன் கட்சிக்காரர்களைக் கண்டிக்கத் துணிச்சல் இல்லாமல் பதுங்குவது ஏன்? பிரச்சனை வெடித்ததும் "கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்" என்ற ஒரு பக்க அறிக்கை தவெக அரசின் பொறுப்பற்ற தன்மையைத் துடைத்துவிடாது. பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டு, போதை சாம்ராஜ்யத்திற்குத் துணைபோகும் இரட்டை வேட அரசியலைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். முதலமைச்சர் விஜய் தன் மவுனத்தைக் கலைத்து, தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டும்!திமுக வெளியிட்ட அதிர வைக்கும் தவெக போதை மாஃபியா பட்டியல்:
சாதாரண தொண்டர்களா? அல்லது சர்வதேச மாஃபியாவா?
முதல்வரின் அதிர்ச்சி தரும் அமைதி!