சென்னை: இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே குடும்பத்துடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, இந்தியாவிலேயே படித்து பட்டம் பெற்று, பின்னர் இந்திய பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் தகவல் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 44 வயதான நபர் ஒருவர், இப்போது 'நாடற்றவர்' ஆகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்சினை.. ஏன் இந்த வினோத சிக்கலை அவர் எதிர்கொண்டுள்ளார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!
பொதுவாக நாம் நினைப்பதை விட சர்வதேச பயண விதிமுறைகளும் சட்டங்களும் கடுமையானவை. நாம் சிறு வயதில் செய்த எதாவது சிறு விஷயம் கூட பின்னாட்களில் நமக்கு எதிராக மாறலாம். அப்படியொரு சிக்கலைத் தான் விவேக் சரவணமுத்து எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் விவேக் சரவணமுத்து இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர், தான் 1982 ஏப்ரல் 26ஆம் தேதி இலங்கையின் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் பிறந்ததாகக் கூறியுள்ளார். 1983ல் இலங்கையில் இனக்கலவரம் மற்றும் உள்நாட்டு பதற்றம் ஏற்பட்ட நிலையில், அவரது குடும்பம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டைக்கு தஞ்சம் புகுந்துள்ளது. அதன் பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளை விவேக் தமிழ்நாட்டிலேயே முடித்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2003ல் பட்டம் பெற்ற அவர், 2004ல் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளார். அப்போது அவரிடம் இலங்கையில் பிறந்ததற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் இல்லையாம். பிறப்பு விவரங்களை நிரூபிக்கும் மாற்று ஆவணங்களும் இல்லாத நிலையில், கையில் இருந்த அடையாள ஆவணங்களை வைத்து இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். தான் நல்லெண்ண அடிப்படையிலேயே பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்ததாகக் கூறியுள்ள அவர், "22 வயது இளைஞராக வாழ்க்கையைத் தொடங்கியிருந்த எனக்கு சர்வதேச குடியுரிமை சட்டங்கள், வரலாற்று ஒப்பந்தங்கள் அல்லது பிறந்த இடம் தொடர்பான சட்ட சிக்கல்கள் குறித்து எந்த புரிதலும் இல்லை. அப்போது இது குறித்த புரிதல் இருந்திருந்தால்.. இதற்கென தனியாக சட்ட நடைமுறைகள் இருப்பதை அறிந்திருந்தால்.. பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் வழிகாட்டுதல் கேட்டிருப்பேன்" என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த விவேக், முதலில் சுமார் 10 ஆண்டுகள் இந்தியாவில் பொறியாளராக வேலை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து 2014ல் பிரபல இந்திய ஐடி நிறுவனத்தின் மூலம் H-1B விசாவில் அமெரிக்கா சென்றுள்ளார். 2019ல் வட கரோலினாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர், கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார். அப்போது தான் 2024ல் இலங்கையின் கொழும்பு மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ பிறப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளார். மேலும், இலங்கை வெளியுறவு துறையிடம் இருந்தும் பிறப்பு தொடர்பான சான்றிதழை பெற்றுள்ளார். தன்னை பற்றி தகவல்களை மறைக்கக்கூடாது உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த நடைமுறைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை அமைப்பிடமும் தனது பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து 2025 அக்டோபரில் வழங்கப்பட்ட கிரீன் கார்டில் அவரது பிறந்த நாடாக இலங்கை குறிப்பிடப்பட்டது. இதற்கு நடுவே அவரது இந்திய பாஸ்போர்ட்டின் 2025 நவம்பரில் காலாவதியான நிலையில், அதைப் புதுப்பிக்க வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகியுள்ளார். அப்போது தனது உண்மையான இலங்கை பிறப்பு சான்றிதழையும் இணைத்து, பாஸ்போர்ட்டில் பிறந்த இடத்தை புதுக்கோட்டையிலிருந்து கொழும்பாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். முதலில் இந்தியத் தூதரகமும் அவரது கோரிக்கையை ஏற்று, அவரது பாஸ்போர்ட்டை 2036 பிப்ரவரி 22 வரை செல்லுபடியாகும் வகையில் புதுப்பித்துள்ளது. இந்த சூழலில் தான் கடந்த ஜூன் 18ம் தேதி திடீரென அவருக்கு ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் 10 நாட்களில் அவர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட் சட்டம், 1967ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை ஏன் அவர் மீது எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இதைப் பார்த்தவுடன் பதறிய விவேக், அதன் பிறகே சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இளைஞராக இருக்கும்போது சட்ட நடைமுறைகள் தெரியாது என்பதும் இப்போதும் தகவல்களை மறைக்கக்கூடாது என்பதால் அவரே அனைத்து தகவல்களையும் தெரியப்படுத்தினார் என்பதே அவரது வாதமாகும். மேலும், இலங்கை குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் குறைந்தது ஒன்பது மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.பின்னணி
ஐகோர்ட்டில் மனு
பிறப்பு சான்றிதழ்
நோட்டீஸ்