சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று ரேஷன் கார்டுதாரர்களுக்கான கைவிரல் ரேகைப்பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இடைத்தேர்தல்கள் நடத்தப்படும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 ஆம் ஆண்டின்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளில் ஆதார் விவரங்களை சரிபார்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டில் பெயர் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளும் தங்களது கைவிரல் ரேகை அடிப்படையிலான இந்த சரிபார்ப்பை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த இடையூறுமின்றி இந்த பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேஷன்கார்டுதாரர்களின் கைரேகை பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இருந்தாலும், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை தவிர்த்து, மற்ற அனைத்து இடங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. எனவே இதுவரை ரேஷன் கடைகள் மூலம் கைவிரல் ரேகைப்பதிவு செய்யப்படாமல் விடுப்பட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இன்று மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.