மேட்டர் சீரியஸ்.. களவாடப்பட்ட மின்வாரிய ஹார்ட் டிஸ்க்ஸ்! வேலையை ஆரம்பித்த சிபிசிஐடி! சிக்குவது யார்?

  • சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. சாதாரண திருட்டு சம்பவமாக தொடங்கிய இந்த வழக்கு, தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், தீவிர விசாரணைக்காக மூன்று தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வழக்கின் பின்னணியில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரக்கூடும் என்றும், பெரிய தலைகள் சிக்கலாமென சொல்லப்படுகிறது.

    Advertisement

    தமிழ்நாடு மின்வாரியத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்டு வந்த 34 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது முதலில் சாதாரண திருட்டு சம்பவமாகவே கருதப்பட்டது. ஆனால் பின்னர் வெளிவந்த தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.

    Advertisement

    குறிப்பாக அந்த ஹார்டு டிஸ்க்குகளில் முக்கிய நிர்வாக தகவல்கள், மின்வாரிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப தரவுகள் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

    ஹார்ட் டிஸ்க் திருட்டு

    எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பின. வெறும் திருட்டு சம்பவமாக இதை பார்க்க முடியாது என்றும், முக்கிய ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு ஹார்டு டிஸ்க்குகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சில அரசியல் கட்சிகள் இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. இந்த சூழலில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    Advertisement

    தமிழ்நாடு மின்வாரியம்

    விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பராமரிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டு வந்த கோபிநாத் என்பவர் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 31 வயதான கோபிநாத், அரக்கோணம் அருகே உள்ள வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்புதான் மின்வாரிய அலுவலகத்தில் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

    கோபிநாத்

    அலுவலகத்தில் உள்ள கணினி உபகரணங்கள் குறித்த முழு தகவலும் அவருக்கு தெரிந்திருந்ததால், சந்தேகம் அவர்மீது திரும்பியது. விசாரணையில், திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளை கோபிநாத் பெங்களூருவில் உள்ள ஒரு கணினி நிறுவனத்திற்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் உடனடியாக பெங்களூரு சென்று சோதனை நடத்தினர். அந்த நடவடிக்கையில் திருடப்பட்டதாக கூறப்பட்ட 34 ஹார்டு டிஸ்க்குகளும் மீட்கப்பட்டன.

    Advertisement

    தீவிர விசாரணை

    இந்த வழக்கில் கோபிநாத் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், ஹார்டு டிஸ்க்குகளை வாங்கியதாக கூறப்படும் பெங்களூருவைச் சேர்ந்த கணினி நிறுவன உரிமையாளர் முரளி மனோகரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திட்டமிட்ட சதி?

    இதற்கிடையில், இந்த வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, ஹார்டு டிஸ்க்குகளில் இருந்த தகவல்கள் யாருக்காவது பயன்படக்கூடிய வகையில் இருந்ததா? அவற்றை அழிக்க அல்லது வெளியே கொண்டு செல்ல ஏதேனும் திட்டமிட்ட சதி நடந்ததா? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

    Advertisement

    சிபிசிஐடி விசாரணை

    இந்த நிலையில், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சென்னை காவல்துறை இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்தது. அதன்பேரில் டிஜிபி அலுவலகம் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு அதிகாரப்பூர்வமாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக, டிஎஸ்பி பிரபு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உதவியாக, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    English Summary

    CBCID forms three special teams to investigate the missing TANGEDCO hard disks and possible larger conspiracy.