நடிகை வைஷாலி பற்ற வைத்த நெருப்பு.. அப்படி பதில் கொடுத்த மின்சார வாரியம்.. ஆதாரத்துடன் வந்த மக்கள்!

  • சென்னை: தவெக ஆட்சி அமைத்த பின் மின்சார கட்டணம் 2 முதல் 4 மடங்கு உயர்ந்திருப்பது தொடர்பாக நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோவுக்கு மின்சார வாரியம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பதிலுக்கு கீழ் பொதுமக்கள் பலரும் ஆதாரத்துடன் மின்சார கட்டணம் உயர்ந்திருப்பது குறித்து புகார் அளித்தும், குற்றம்சாட்டியும் வருகின்றனர்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைத்த பின் முதல்வர் விஜய் 200 யூனிட் மின்சாரம் திட்டத்தில் கையெழுத்திட்டார். இப்படியான சூழலில் கடந்த 2 மாதங்களாகவே மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக சாமானிய மக்கள் தொடங்கி தொழில் நடத்தி வரும் பலரும் குமுற தொடங்கிவிட்டனர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஸ்டாலின், விஜே சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சித்திருந்தார்.

    Advertisement

    தற்போது நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனென்றால் விஜய் 200 யூனிட் மின்சார திட்டத்திக் கையெழுத்து போட்டத்தை நடிகை வைஷாலி பெருமையாக வீடியோ போட்டிருப்பதையும் இணைத்து, தற்போது மின் கட்டணம் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மின் கட்டணத்தில் தவெக சொல்லியதை போல் மாறவில்லை.

    மீண்டும் பழையவாறே கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தவெகவின் 200 யூனிட் மின் திட்டத்திற்கு ஆதரவாக வீடியோ போட்டதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், மின்சார வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நடிகை வைஷாலியின் புகார் தொடர்பாக மின்சார வாரியம் தரப்பில், இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.

    புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    Advertisement

    உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மின்சார வாரியத்தின் இந்த பதிலுக்கு பொதுமக்கள் பலரும் தங்களுக்கு ஏப்ரல், மே மாதத்தில் வந்த மின்சார கட்டணத்தை விடவும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வந்துள்ள மின்சார கட்டணத்தை ஆதாரத்துடன் பகிர்ந்து வருகின்றனர். அதில் இன்னொரு முக்கியமான விஷயமென்றால், பொதுமக்கள் ஆதாரத்துடன் இந்த புகாரை அளித்துள்ளனர்.

    Advertisement

    அவர்களுக்கும் மின்சார வாரியம் தரப்பில், உங்கள் முழு விவரங்களை DM-ல் பகிர்ந்து கொள்வதன் மூலம், தங்கள் புகார் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர், இப்படி தான் ஓவர் வோல்டேஜ்க்கும் என்னிடம் DM ல விவரம் கேட்டீர்கள், ஆதாரத்துடன் கொடுத்தேன், இதுவரை ஒரு பதிலும் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    இன்னொரு நபர், சாதாரண மக்கள் வீடியோ போட்டால் கண்டுகொள்ளாமல், இப்படி உடனடியாக X-தளத்தில் பதிவும் செய்யாமல், திரையுலகம் வீடியோ செய்தால் மட்டும் கண்டுகொள்வது ஏன்? முன்பு விட தற்போது மின்கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமாக தான் உள்ளது என்று அனைவரும் சொல்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்று சாடியுள்ளார். இன்னும் இதுபோல் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதாரத்துடன் மின்சார வாரியத்தை கேள்வி கேட்டு வருகின்றனர். முதல் சில பேருக்கு பதில் அளித்த மின்சார வாரியம், பின்னர் எந்த பதிலும் யாருக்கும் அளிக்கவில்லை.

    Advertisement

    English Summary

    TANGEDCO Response Faces Public Backlash after responds to Actress Vaishali Electricity Bill Hike video