சென்னை: "எனக்கு வயது 33 (பெண்). காதல் திருமணம். 7 ஆண்டுகள் காதலித்து, அதற்குப் பிறகுதான் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் ஆன தொடக்கத்தில் இருவருமே வேலைக்குச் சென்றோம். அவர் அப்போதுதான் தொழில் தொடங்கிருந்தார். நான் ஒரு இடத்தில் 12 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றேன். 2 ஆண்டுகளில் அவருடைய தொழில் நன்றாக போனது . அதற்குப் பிறகுதான் குழந்தை பெற திட்டமிட்டோம். அடுத்த மாதமே கர்ப்பமானேன்; 3-வது மாதத்தில் வேலையை விட்டுவிட்டேன். எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது (இப்போது குழந்தைக்கு சில ஆண்டுகள் ஆகின்றன).
பிரச்சனை என்னவென்றால், என் கணவர் மது அருந்துவார் . அதனால் அடிக்கடி சண்டை வரும். உண்மையிலேயே அதனால்தான் எங்களுக்குள் சண்டையே வரும். எங்களுக்குள் நடக்கும் சண்டையை என் அம்மாவிடமோ, நண்பர்களிடமோ, யாாரிடமும் தெரியவிட மாட்டேன். இரவில் சண்டை போடுவோம், காலையில் அப்படியே இயல்பு நிலைக்கு வந்துவிடுவோம்.
அவர் மது அருந்திவிட்டு வந்தால், இரவில் என்னையும் பாப்பாவையும் ரொம்ப தொந்தரவு செய்வார். கெட்ட வார்த்தைகள் பேசுவது, அடிப்பது என்றுதான் இருக்கும். இப்போது திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்னமும் இது தொடர்கிறது... கடந்த ஆண்டு அதிகமாகக் குடித்து அவருக்குக் கணைய அழற்சி வந்துவிட்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நான் மட்டும்தான் கூடவே இருந்து பார்த்துக்கொண்டேன். அவருடைய பெற்றோர் முதல் நாள் வந்தார்கள், அதற்குப் பிறகு முழுமையாக நான்தான் பார்த்துக்கொண்டேன். குணமாகி வந்த பிறகு மீண்டும் குடிக்கத் தொடங்கினார்... கேட்டால் தொழில் மனஅழுத்தம் என்று சொல்வார். இப்போது கடந்த 6 மாதங்களாகச் சர்க்கரை நோயும் வந்துவிட்டது... ஆயுர்வேத சிகிச்சை எடுத்தார்கள்... மீண்டும் குடித்தார்கள். கடந்த 6 மாதங்களில் அவரது உடல் எடை 80 கிலோவிலிருந்து 71 கிலோவாகக் குறைந்துவிட்டது... ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும்போது எடை கூடியது, மீண்டும் குடிக்கத் தொடங்கியதும் எடை மீண்டும் குறைந்துவிட்டது. அவருடைய எல்லா கஷ்டத்திலும் அவரை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளேன்... இதுவரை அவர் குடித்துவிட்டுச் செய்யும் எதையுமே நான் யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எனக்குள்ளேயே வைத்துக்கொள்வேன். கடந்த வாரம் எங்களுக்குள் நடந்த சண்டையில், 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என்று சொன்னார். எனக்கு அவருடைய உடம்பு இப்படி ஆகிக்கொண்டிருக்கிறதே என்று கவலை. இன்று மீண்டும் குடிக்கிறார் என்று அவருடைய அம்மாவிடம் சொன்னேன், ஏனென்றால் அவருடைய உடல்நிலை ரொம்ப மோசமாகிக்கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரிகிறது. 'நீ ஏன் என் அம்மாவிடம் சொன்னாய்' என்று இன்றைக்கும் சண்டை. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு எங்கேயாவது ஓடிவிடலாம் என்று தோன்றுகிறது... என் பாப்பாவின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. எனக்கு இன்னொரு திருமணம் அல்லது உறவில் நம்பிக்கை இல்லை. எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது. என் கணவர் குடும்பம் வசதியான குடும்பம் . நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால், ஆரம்ப ஆண்டுகளில் பெரிய அளவில் குடும்ப ஆதரவு இல்லை... எங்கள் வீட்டில் கூட 4 ஆண்டுகள் பேசவில்லை, அதற்குப் பிறகுதான் பேசினார்கள். எனக்கு என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை. அவர் குடிப் பழக்கத்தை நிறுத்துவது போல் தெரியவில்லை... சில ஆலோசனைகள் தேவை, தயவுசெய்து உதவுங்கள்." இவ்வாறு கூறியிருந்தார். இந்த பதவினை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த பதிவு குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டது ஆண் மட்டுமல்ல அவரது குடும்பமும் தான் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. குடிப்பழக்கம் எவ்வளவு மோசமானது என்பதை இதனைவிட யாராலும் அழுத்தமாக சொல்ல முடியாது.