டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி? மனமகிழ் மன்றங்களுக்கு செக்.. இன்று முக்கிய முடிவு

  • சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளின் அருகில் பார்கள் அரசின் விதிமுறைப்படி அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் பார்களை மேலும் 3 மாதங்களுக்கு இயங்க அனுமதி அளிப்பதற்கு இன்று உயர்நிலை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் பார்களை நடத்துவதற்கான மொத்தமுள்ள 54 விதிகளில் சில விதிகளை திருத்த முடிவு செய்யப்பட உள்ளதாம்.

    Advertisement

    தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே பார்கள் இயங்கி வருகின்றன. இந்த பார்களை நடத்துவதற்கு, அதற்கான விதிகளின்படி உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். அந்த உரிமத்தை பெறுவதற்கு, பார்கள் நிறுவப்படும் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, நில அனுமதி, கட்டிட ஸ்திரத்தன்மை சான்றிதழ் போன்றவற்றை சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி. நிறுவனங்களிடம் இருந்து பெற்று தாக்கல் செயவார்கள். இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு புகார் மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    Advertisement

    சென்னையில் இயங்கும் பார்கள் அமைந்துள்ள பல கட்டிடங்கள், சென்னை மாநகராட்சி அல்லது சி.எம்.டி.ஏ.விடம் இருந்து முறையான திட்ட அனுமதியை பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பார் அனுமதி பெறுவதற்காக பல போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றினால் விபத்து நேரிட்டு, மதுபானம் அருந்துவோர் பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கிறது.

    மேலும், 2019-ம் ஆண்டில் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கட்டிட திட்ட அனுமதியை முறையாக பெற்றுள்ள கட்டிடங்களில் மட்டும் மது விற்பனை கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும். அந்த கட்டிடம் மற்றும் அது அமைந்துள்ள நிலம் ஆகியவற்றிற்கான திட்ட அனுமதி, சட்டப்படி பெறப்பட்டுள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரி சரிபார்க்க வேண்டும்.

    Advertisement

    இந்த நிலையில் 6-ந்தேதி (இன்று) டாஸ்மாக் நிறுவனத்தின் உயர்நிலை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், முறையான அனுமதி பெறாத கட்டிடங்களில் பார்கள் இயங்க உரிமம் தரக்கூடாது. அப்படி உரிமம் தரப்பட்டால் அது கோர்ட்டு அவமதிப்பு குற்றமாக கருதப்படும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் இன்று டாஸ்மாக் நிறுவனத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறும் போது, இன்று நடைபெறும் கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. தற்போது நடத்தப்படும் பார்கள் இயங்க 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    மேலும் பார்களை நடத்துவதற்கான மொத்தமுள்ள 54 விதிகளில் சில விதிகளை திருத்த முடிவு செய்யப்படலாம். இந்த திருத்தத்தின்படி, சென்னை மாநகராட்சி அல்லது சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி.யிடம் பெறப்பட்ட, கட்டிடங்கள் மற்றும் நிலத்துக்கான திட்ட அனுமதி ஆணைகள் சரிபார்க்கப்படும். உணவு கட்டுப்பாட்டுத்துறை, தீயணைப்புத்துறை போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ்களும் சரிபார்க்க திட்டமிட்டுள்ளோம்.

    போலி அனுமதி உத்தரவுகள் தரப்பட்டு இருந்தால், அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்? என்பது தொடர்பாகவும் விதிகளில் திருத்தம் கொண்டு வர டாஸ்மாக் உயர்நிலைக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் அனைத்தும் எப்.எல்.2 என்ற மனமகிழ் மன்றங்களுக்கும் பொருந்தும். டெண்டர் விடுவதற்கான விதிகளிலும் திருத்தங்கள் இருக்கும் என அதிகாரிகள் வட்டாரங்கள் கூறின.

    English Summary

    A high-level meeting of TASMAC is taking place today. Government sources indicate that crucial decisions are expected to be made during this meeting; specifically, a decision is likely to be reached to grant permission for the continued operation of existing bars for a period of three months.