TASMAC: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஊதியத்துடன் விடுமுறை! சட்டசபையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு

  • சென்னை: 1.09.2026 முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுவதாக தமிழக சட்டசபையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, மேற்பர்வையாளர்களுக்கு மாதம் ரூ.33,026-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284-ம், உதவி விற்பனையாளர்களுக்கு மாதம் 28,650 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.486.90 கோடி செலவு ஏற்படும் என்று கூறிய அமைச்சர் விக்னேஷ், நமது அரசில் ஒரு ரூபாய் வசூல் செய்தால் கூட இடைநீக்கம் செய்யப்படுவார்கள். அடுத்த முறையும் தவறு தொடர்ந்தால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் சட்டசபையில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு

    டாஸ்மாக் நிறுவனத்தில் சில்லரை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கவும், பணியாளர்கள் வாழ்வாதாரம் தேவைகளை கவனத்தில் கொண்டும் சங்க பிரதிநிதிகளுடன் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

    பேச்சுவார்த்தை அடிப்படையிலும், டாஸ்மாக் நிர்வாக குழுவின் முடிவின் அடிப்படையிலும் நான் மேலும் சில அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிடுகிறேன். 23 ஆண்டுகளாக தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 1.09.2026 முதல் மேற்பர்வையாளர்களுக்கு மாதம் ரூ.33,026 -ம், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284-ம், உதவி விற்பனையாளர்களுக்கு மாதம் 28,650 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி.

    Advertisement

    பண்டிகை முன்பணம் ரூ.20 ஆயிரம்

    டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அண்டு தோறும் மூன்று சீருடைகள் துணி மற்றும் தையல் செலவுகளுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மாநகரங்களில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் மாதம் தோறும் ரூ.5 ஆயிரமும், நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு மாதம் ரூ 4 ஆயிரமும், கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேரம் பணி ஒதுக்கீடு, வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் தகுதி உடைய 250 பணியாளர்களை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    Advertisement

    கூடுதல் விலைக்கு விற்றால் நிரந்தர பணி நீக்கம்

    இந்த அறிவிப்புகள் பணியாளர் நலன் சார்ந்து வெளியிடப்படுவது மட்டும் இன்றி பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் அவர்களுக்கு வெறும் அபராதம் மட்டும் போட்டார்கள். ஆனால், நமது அரசில் ஒரு ரூபாய் வசூல் செய்தால் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். அடுத்த முறையும் தவறு தொடர்ந்தால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

    English Summary

    TASMAC employees Salary hike and paid leave: Minister Vignesh announced in the Tamil Nadu Legislative Assembly that the salaries of TASMAC employees will be increased effective September 1, 2026. Accordingly, he stated that the monthly salaries would be raised to ₹33,026 for supervisors, ₹30,284 for salespeople, and ₹28,650 for assistant salespeople.