சென்னை: டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய ரதேஷை போலீசார் தேடி வருகிறார்கள். அவர், வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'டாஸ்மாக்' நிறுவனத்தில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'டாஸ்மாக்' முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன், 'டாஸ்மாக்' அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ரதேஷ், கார்த்திக், ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மதுபான உற்பத்தி ஆலைகள், சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத 'டாஸ்மாக்' ஊழியர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சிகாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் கரூர் சேர்ந்த கார்த்திக், ரமேஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ரத்தேஷ் ராஜூவை (ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர்) போலீசார் தேடி வருகிறார்கள். அவர், வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார். இதையடுத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கி உள்ளனர். எனினும் இந்த புகாரை செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.