அப்போ டாஸ்மாக் ஆன்லைன் ஆர்டர் டம்மியா.. கையை விரித்த சேல்ஸ்மேன்! அங்கேயும் பாட்டிலுக்கு 10 ரூபா!

  • சென்னை: வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மதுபானங்களை முன் பதிவு செய்யலாம் என சமீபத்தில் அறிவித்து இருந்தார் மதுவிலக்குத்துறை அமைச்சரான விக்னேஷ். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தாலும் மதுபான கடைகளில் அந்த வசதி இன்னும் வரவில்லை எனவும், ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Advertisement

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆன்லைனில் மதுபானங்களை முன்பதிவு செய்து, QR Code மூலம் கடையில் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கும்பினிபேட்டையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை எண் 11147-ல் இந்த ஆன்லைன் வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மதுப்பிரியர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி மதுபானங்களை முன்பதிவு செய்துள்ளனர்.

    பின்னர், முன்பதிவுக்கான QR Code-ஐ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்று காண்பித்தபோது, "எங்கள் கடையில் இன்னும் ஆன்லைன் வசதி நடைமுறைக்கு வரவில்லை" என ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆன்லைனில் பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்த மதுப்பிரியர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆன்லைனில் செலுத்திய பணம் உடனடியாக திரும்ப கிடைக்காத நிலை ஏற்பட்டதாகவும் மதுப்பிரியர்கள் தெரிவித்தனர்.

    Advertisement

    இதனிடையே, வழக்கம்போல் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வழங்கினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என ஊழியர்கள் கூறியதாகவும், வேறு வழியின்றி கூடுதல் தொகையை செலுத்தி மதுபானங்களை வாங்கிச் சென்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக எழும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே ஆன்லைன் முன்பதிவு வசதி கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் நிலையில், நடைமுறையில் அந்த வசதி அனைத்து கடைகளிலும் முழுமையாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழகம் முழுவதும் ஆன்லைன் மதுபான முன்பதிவு வசதி செயல்பாட்டில் இருப்பதாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இதுவரை ஆன்லைன் முறையில் மதுபானங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், கும்பினிபேட்டை டாஸ்மாக் கடையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த மதுபானத்தை பெற முடியவில்லை என மதுப்பிரியர்கள் கூறும் நிலையில், அதிகாரிகளின் விளக்கத்திற்கும், கடை அளவில் கூறப்படும் தகவலுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    "பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதை தடுக்க ஆன்லைன் முன்பதிவு வசதி கொண்டு வரப்பட்டும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் இந்த பிரச்சினைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்க முடியும்?" என மதுப்பிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஆன்லைன் முன்பதிவு வசதி உண்மையில் செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் எழும் கடைகளில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் ராணிப்பேட்டை மாவட்ட மதுப் பிரியர்கள்.

    English Summary

    TASMAC customers allege online booking failed at a Ranipet outlet, while staff reportedly demanded ₹10 extra per liquor bottle.