10:05 ஆனாலும் விடமாட்டோம்”.. டாஸ்மாக் டைமிங்கில் டிஜிபி வார்னிங்? ஓவர் டியூட்டியில் இன்ஸ்பெக்டர்கள்

  • சென்னை: தமிழகத்தில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்குவதை முற்றிலுமாகத் தடுக்க, முதல்வர் விஜய் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். விதிகளுக்குப் புறம்பாகக் கடை திறந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சட்டவிரோத மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை இங்கே சுருக்கமாக காண்போம்.

    Advertisement

    தமிழகத்தில் மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்களை இரவு 10 மணிக்குள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்பது நீண்ட கால விதியாகும்.

    Advertisement

    மதுபானக் கடைகள் மூட டைமிங்

    ஆனால், இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவைத் தடுக்கும் நோக்கிலும், தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை முதற்கட்டமாக உடனடியாக மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மதுப்பழக்கத்தால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு துணிச்சலான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    டாஸ்மாக் அதிரடி

    இந்த விவகாரத்தில் அரசு இவ்வளவு தீவிரமாகச் செயல்படக் காரணம், இரவு 10 மணிக்கு மேல் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனை சமூகத்தில் பல்வேறு குற்றங்களுக்கு வித்திடுகிறது என்பதுதான். இந்த கள்ளச்சந்தை விற்பனையை முழுமையாக ஒழிக்க, கண்காணிப்புப் பணிகளைப் பலப்படுத்த காவல்துறைக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், காவல்துறை டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோட், மாநிலம் முழுவதும் உள்ள மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்குப் பிறப்பித்துள்ள உத்தரவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்தப் பகுதி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்களின் கடமை என்றும், இதில் தவறு நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    10.05-க்கு கடை திறந்திருந்தால்?

    இந்த உத்தரவின்படி, இரவு 10 மணிக்கு மேல் மதுக்கடைகள் அல்லது பார்கள் திறந்திருந்தால், அதைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரிகள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. ஏற்கனவே காவல் துறையினர் இரவு 10 மணிக்குக் கடை மூடப்பட்ட பிறகு, அந்த இடத்தின் முன் தேதி, நேரம் மற்றும் இடத்தைக் குறிப்பிடும் வகையில் போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது.

    இதனை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, இரவு 10:05 மணிக்கு ஒரு கடை திறந்திருந்தாலும், அதற்குப் பொறுப்பான எஸ்.ஐ. மற்றும் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரித்துள்ளாராம்.. மேலும், அந்தந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

    Advertisement

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை என்றாலும், இந்த தகவல் சோஷியல் மீடியாவில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. எனினும், இந்த நடவடிக்கை மூலம் மாநிலம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.

    இரவு நேரங்களில் ரோந்து

    இரவு நேரங்களில் பார்கள் திறந்திருப்பது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மோதல்கள் மற்றும் பிற குற்றச் சம்பவங்களுக்குக் காரணமாக அமைவதைத் தவிர்க்கவே இத்தகைய கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்படுகின்றன போலும். ஆனால், அனைத்து மண்டலங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை முறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் சமூக அமைதியையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விதிகளுக்குக் கட்டுப்படாமல் செயல்படும் கடைகள் மற்றும் அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இது மதுக்கடைகள் மற்றும் பார்கள் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேசமயம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....!

    English Summary

    TASMAC Open After 10:05 PM! Suspension for Inspector? Vijay Leads Strict Crackdown on Tamil Nadu Liquor Shops