சென்னை திருவான்மியூர் ஜெயந்தி சிக்னலில் மூடப்பட்ட டாஸ்மாக் மீண்டும் திறப்பு.. சமூக ஆர்வலர் கடிதம்

  • சென்னை: சென்னை திருவான்மியூர் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு சமூக ஆர்வலர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். திருவான்மியூர், ஜெயந்தி சிக்னல் அருகே எல்.பி. சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை ஒரு நாள் கழித்து மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதாக தனது கடிதத்தில் சமூக ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10 ஆம் தேதி விஜய் பொறுப்பேற்ற பின்னர், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூடும்படி கடந்த 12&ஆம் தேதி ஆணையிட்டார். முதலமைச்சரின் ஆணைப்படி 717 மதுக்கடைகளும் அடுத்த இரு வாரங்களில், அதாவது வரும் 26 ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும்.

    Advertisement

    ஆனால், முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து 150 மதுக்கடைகள் வேகமாக மூடப்பட்ட நிலையில், மீதமுள்ள 500&க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் மூடப்படவில்லை என கூறப்படுகிறது. அவற்றை மூடுவதில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், அவை தீரும் வரை மதுக்கடைகளை மூடும் பணி நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது குறித்து சமூக ஆர்வலர் உண்ணிகிருஷ்ணன், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் நந்தகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறுகையில், "திருவான்மியூர், ஜெயந்தி சிக்னல் அருகே எல்.பி. சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை ஒரு நாள் கழித்து மீண்டும் செயல்படத் தொடங்கியதால் திருவான்மியூர் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடை எண் 898-ன் ஊழியர்கள், கடந்த 14-ந்தேதி, கடையை மூடுமாறு அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருந்தனர். அந்தக் கடை கடந்த 15-ந்தேதி மூடப்பட்டிருந்தது.

    Advertisement

    ஆனால் மறுநாள் மீண்டும் திறக்கப்பட்டு, அன்று முதல் தொடர்ந்து இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையில் ஒரு பாரும் உள்ளது. கல்வி நிறுவனங்கள், கோவில்கள், பஸ் நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விதிப்படி பார்த்தால், இது அனைத்து விதிகளையும் மீறுவதாகும்.

    எஸ்.ஆர். ஒயின் ஷாப் மற்றும் எஸ்.ஆர். டீலக்ஸ் பார் என்று உள்ளூர் மதுப்பிரியர்களால் அறியப்படும் இந்த கடை சங்கர வித்யாலயா பள்ளியில் இருந்து 250 மீட்டர் தொலைவிலும், திருவான்மியூர் பஸ் டிப்போவில் இருந்து 300 மீட்டர் தொலைவிலும், கிருஷ்ணா மந்திரம் கோவிலில் இருந்து 400 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பஸ் நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட த.வெ.க. அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில், திருவான்மியூர் உள்பட பல்வேறு இடங்களில் இன்னும் மூடப்படாமல் உள்ள கடைகள் விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

    English Summary

    A social activist has written a letter to the Managing Director of TASMAC, stating that a TASMAC outlet located on LB Road near the Jayanthi Signal in Thiruvanmiyur, Chennai—which had previously been closed—has been reopened.