டாஸ்மாக் ஊழியர்கள் vs அரசு.. வெடித்த நேரடி யுத்தம்.. பின்வாங்க முடியாத தர்மசங்கடத்தில் விஜய் அரசு!

  • சென்னை: தமிழக அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக மதுபானங்களை விற்ற புகாரில் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை புறநகர்ப் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் திடீரென மூடி போராட்டத்தில் இறங்கியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டிய அரசுக்கும், விதிகளை மீறி செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் இடையேயான ஒரு நேரடி மோதலாகவே இந்த விவகாரம் உருவெடுத்துள்ளது.

    Advertisement

    பின்னணி என்ன?

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை எம்.ஆர்.பி விலையை விடக் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாகப் பொதுமக்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றமும் கடுமையான கண்டனங்களை அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் பதிவு செய்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய திடீர் ஆய்வுகளில் விதிகளை மீறிய பல ஊழியர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    Advertisement

    விஜய் அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் ஊழியர்கள்?

    இந்த ஒழுங்கு நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கடைகளை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மூடிவிட்டுப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்வாகம் எடுத்த ஒழுங்கு நடவடிக்கைக்கு அடிபணியாமல், ஒட்டுமொத்தக் கடைகளையும் அடைத்து நிர்வாகத்திற்கு அழுத்தம் தரும் பணியாளர்களின் இந்த நகர்வு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கு உடன்படாமல் சேவைகளை முடக்குவது என்பது அரசை அச்சுறுத்தும் ஒரு வடிவமாகவே பார்க்கப்படுகிறது. விதிகளை மீறுவதும், அதற்கான சட்டபூர்வ நடவடிக்கை வரும்போது அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒரு நிலைப்பாடாகவே விமர்சிக்கப்படுகிறது.

    Advertisement

    புதிய நிலவரம்: நிர்வாகத்தின் எச்சரிக்கை

    இந்நிலையில், பணிக்கு வராமல் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எஸ்மா போன்ற அத்தியாவசியப் பணிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும், கடைகளை உடனடியாகத் திறக்க மாற்றுப் பணியாளர்களை நியமிப்பது குறித்தும் டாஸ்மாக் நிர்வாகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. 'பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு எந்தச் சூழலிலும் சகித்துக் கொள்ளாது; கடைகளை உடனடியாகத் திறக்காவிட்டால் துறை ரீதியான நிரந்தர பணிநீக்க நடவடிக்கைகள் பாயும்' என மாவட்ட மேலாளர்கள் வழியாகக் கடும் எச்சரிக்கைக் குறிப்புகளும் அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அரசுக்கு விழுந்துள்ள சவால்

    இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நிலைப்பாடு மிகவும் தீர்க்கமானதாக இருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. தனது சொந்த நிறுவனத்தின் பணியாளர்களே அரசை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்படுவதை அரசு மென்மையான போக்கில் கையாண்டால், அது நிர்வாகச் சீர்குலைவுக்கே வழிவகுக்கும். "சட்டத்தை மீறுவோம்.. நடவடிக்கை எடுத்தால் நிர்வாகத்தையே முடக்குவோம்" என்ற தவறான முன்னுதாரணத்திற்கு இது வழிவகுத்துவிடும் அபாயம் உள்ளது.

    நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், சட்டம் ஒழுங்கையும், அரசின் அதிகாரத்தையும் நிலைநாட்ட வேண்டிய கடமை தற்போது தமிழக அரசுக்கு உள்ளது. நுகர்வோரை ஏமாற்றும் கூடுதல் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதிலும், அத்துமீறும் ஊழியர்களின் மிரட்டல்களுக்குப் பணியாமல் துறை ரீதியான ஒழுங்கை மீட்டெடுப்பதிலும் அரசு காட்டும் உறுதிதான் எதிர்கால நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கான அடித்தளமாக அமையும். அடுத்த சில மணி நேரங்களில் அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவுகளே டாஸ்மாக் நிர்வாகத்தின் போக்கை தீர்மானிக்கும்.

    English Summary

    TASMAC Outlets Shut Down in Chennai Suburbs: Employees Strike Over Suspensions, Will TN Govt Crack Down?