சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இத்துடன் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் அந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.. தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது..
ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் ஒரு துறையாக டாஸ்மாக் விளங்குவதை சுட்டிக்காட்டியுள்ள கிருஷ்ணசாமி, இந்த நிர்வாகப் பின்னணியில் கடந்த கால ஆட்சியாளர்களின் பினாமிகளாகச் செயல்படும் 19 மதுபான உற்பத்தி ஆலை அதிபர்கள் இருப்பதாக நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
இந்த ஆலை அதிபர்கள் பெருமளவில் பணத்தைக் கொள்ளையடிப்பதன் காரணமாக, ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதாரமும் ஒரு சில தனிநபர்களின் கைகளில் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.. மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.. டாஸ்மாக் கடைகளில் தினசரி நடக்கும் முறைகேடுகள் குறித்தும் பல்வேறு புகார்களைத் தனது அறிக்கையில் அவர் பட்டியலிட்டுள்ளார்.. அதன்படி, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.. பார்' டெண்டர்கள் வழங்குவதிலும் பெரும் முறைகேடுகள் நடக்கின்றன.. மேலும், விதிகளுக்குப் புறம்பாக பல இடங்களில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.. இத்தகைய முறைகேடுகளின் காரணமாக, ஆண்டுக்குக் குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் அரங்கேறி வருவதாக டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.. இந்த நிதி இழப்புகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக உள்ளது.. அரசு அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகள் குறித்தும் அவர் தனது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.. தற்போது தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 4,765 மதுக்கடைகளில் வெறும் 717 கடைகளை மட்டும் மூடுவதாக அரசு அறிவித்துள்ளதை மூத்த தலைவர் கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டினார். இந்த சொற்ப எண்ணிக்கையிலான கடைகளை மூடுவதால் சமூகத்தில் எந்தவிதமான அடிப்படை மாற்றமும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பது அவரது வாதம்.. ஒருபுறம் கடைகளை மூடுவதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் நவீன பார்கள் பெருகுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.. இந்த நவீன பார்கள் மூலமாக மது கலாச்சாரம் இளைஞர்களிடம் மேலும் தீவிரமடைந்து வருவதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.. மொத்தத்தில், மதுபான வருமானமின்றி தமிழக அரசு இயங்காது என்ற நிலையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.. மதுவினால் ஏற்படும் சமூக சீரழிவுகளையும் குற்றச் சம்பவங்களையும் கட்டுப்படுத்த முழுமையான தடை மட்டுமே தீர்வாக அமையும்.. மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு, தமிழக அரசு உடனடியாகப் பூரண மது விலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையின் நிறைவாகக் கோரிக்கை விடுத்துள்ளார்..டாஸ்மாக் 100000 கோடி ஊழல்?
டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
அரசு டாஸ்மாக் கடைகள்
பூரண மதுவிலக்கு