சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தை சீரமைக்கவும், முறைகேடுகளைக் களையவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தனியார் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஆளும் தரப்பிற்குள் புதிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
டாஸ்மாக் கிடங்குகளுக்கு மதுபானங்களை விநியோகம் செய்யும் சில தனியார் உற்பத்தி நிறுவனங்கள், நீண்டகாலமாகவே ஒரு ரகசிய முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாகப் புகார்கள் எழுந்தன. அரசு கொள்முதல் ஆணை வழங்கும் அதிகாரப்பூர்வப் பெட்டிகளோடு கூடுதல் பெட்டிகள் ஏற்றியதாக புகார்கள் உள்ளன. இதை களைய களமிறங்கிய அமைச்சர் விக்னேஷுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.
அதன்படி எந்தவித கணக்கிலும் வராத, வரி செலுத்தப்படாத கூடுதல் மதுபானப் பெட்டிகளையும் ஏற்றி அனுப்புவதை அந்த நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தன. இதன் மூலம், அரசுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய் வரிப் பணத்தைச் சுருட்டி, சட்டவிரோத லாபம் பார்த்து வந்தன. இந்த விவகாரத்தை தீவிரமாகக் கண்காணித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், ஆய்வுகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதில், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் தொடர்ந்து வரி ஏய்ப்பிலும், கணக்கில் வராத மதுபானப் பெட்டிகளை விநியோகிப்பதிலும் ஈடுபட்டது ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிறிதும் தயக்கம் காட்டாத அமைச்சர் விக்னேஷ், சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு 1.8 ரூபாய் கோடி அபராதம் விதித்து அதிரடி உத்தர பிறப்பித்தார். அத்துடன் நிற்காமல், டாஸ்மாக் நிறுவனத்திற்கு அந்த ஆலை மதுபானங்களை விநியோகம் செய்வதற்கான உரிமத்தை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தம் செய்து நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை, நீண்டகாலமாக முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த தனியார் மதுபான ஆலை அதிபர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகத் தங்களுக்குள் வர்த்தகப் போட்டி போட்டுக்கொள்ளும் சில தனியார் மது உற்பத்தி நிறுவனங்கள், அமைச்சரின் இந்த இறுக்கமான நடவடிக்கையை எதிர்கொள்ள இப்போது ஒன்று திரண்டுள்ளன. அமைச்சரைப் பழிவாங்கவும், தங்களின் முறைகேடுகளுக்கு மீண்டும் வழிவகுக்கவும் அந்த நிறுவனங்கள் ஒரு ரகசிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளன. செல்வாக்குமிக்க திமுக பிரமுகர் ஒருவருடன் இந்தத் தனியார் மதுபான ஆலை நிர்வாகங்கள் கைகோத்துள்ளன. அந்தப் பிரமுகரின் அரசியல் தொடர்புகளையும், செல்வாக்கையும் பயன்படுத்தி, தவெகே கட்சிக்குள்ளேயே அமைச்சருக்கு எதிராகப் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அமைச்சர் விக்னேஷை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைப் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று ஆளும் தலைமைக்குத் தொடர் அழுத்தங்களை அளித்து வருகின்றன. அமைச்சரின் தீவிரக் கண்காணிப்பால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதாகவும், வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் காரணம் கூறி, துறை மாற்றத்திற்கான லாபியிங் பணிகளில் இந்தச் சக்தி வாய்ந்த குழு தீவிரமாக இறங்கியுள்ளது. விஜய்யும் கூட விக்னேஷை மாற்றலாமா என்று யோசிக்கும் அளவிற்கு புகார்கள் சென்றுள்ளதாம். நேர்மையாகச் செயல்பட்டு அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயைப் பாதுகாக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்த நிலையில், சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு எதிராக உருவாகியுள்ள இந்த மறைமுக எதிர்ப்பும், திமுக பிரமுகரின் அழுத்தங்களும் அமைச்சர் விக்னேஷுக்கு மன உளைச்சலையும் நெருக்குதலையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் டாஸ்மாக் முறைகேடுகளை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் அமைச்சர், மறுபுறம் தனக்கு எதிராக வீசப்படும் அரசியல் வலைகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதும், இந்த விவகாரத்தில் அரசுத் தலைமை அமைச்சரின் பக்கமே உறுதியாக நிற்குமா அல்லது லாபியிங் குழுவின் அழுத்தத்திற்குப் பணியுமா என்பதும் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கடுமையான அபராதம்
கடுமையான நடவடிக்கை