காய் நகர்த்திய விஜய்.. அவசரமாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி!

  • சென்னை: டாஸ்மாக்கில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணவசூலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, கைது நடவடிக்கையிலிருந்து தப்ப சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    மாநிலம் முழுவதும் 41 இடங்களில் அதிரடி சோதனை

    டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள 41 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

    Advertisement

    செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்கள், டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் மதுபான உற்பத்தி ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், முறைகேடுகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி

    லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ். விசாகன் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களான ரதீஷ் ராஜ், மூலனூர் கார்த்தி உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தனியார் பார்கள், மதுபான உற்பத்தி ஆலைகள், பீர் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து டெண்டர் நடைமுறைகளில் பெருமளவில் முறைகேடு செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களில் இந்த முறைகேடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுள்ளதாக புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

    பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

    2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் மாபெரும் நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, கோவை வடக்கில் ரூ.17.27 கோடியும், கோவை தெற்கில் ரூ.13.58 கோடியும், நீலகிரி மண்டலத்தில் ரூ.1.95 கோடியும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுமட்டுமன்றி, மதுப் பிரியர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. சாதாரண மதுபான பாட்டில்களுக்கு MRP விலையை விட ரூ.10 முதல் ரூ.100 வரையிலும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு ரூ.500 வரை சட்டவிரோதமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு இந்த புதிய எஃப்ஐஆர் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னரும், டாஸ்மாக் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாடுகளில் அவர் தனது செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தியதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

    Advertisement

    இதில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, கைது நடவடிக்கையிலிருந்து தப்ப சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    English Summary

    TASMAC Scam: Senthil Balaji Moves High Court for Anticipatory Bail