சென்னை: டாஸ்மாக் கடைகளில் இனி தூய்மைப் பணிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக மாதந்தோறும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை பராமரிப்பு நிதி வழங்கப்பட உள்ளது. இதற்கான புதிய நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது. கடைகளின் தூய்மை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 4,048 டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் உள்ளன. இதில் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் 842 கடைகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 835 கடைகளுக்கு ரூ.4000, கிராமப்புற மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள 2,371 கடைகளுக்கு ரூ.3000 வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான பராமரிப்பு தொகை செப்டம்பர் 30-ம் தேதி, செப்டம்பர் மாத சம்பளத்துடன் சேர்த்து கடை மேற்பார்வையாளரின் வங்கிக் கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்படும். இதேபோல் ஒவ்வொரு மாதமும் அடுத்த மாதத்துக்கான தொகை முன்கூட்டியே வழங்கப்படும். இந்த தொகையை கடையை தினமும் சுத்தம் செய்ய தேவையான துடைப்பம், ரசாயனப் பொருட்கள், கிருமிநாசினி, பினாயில், குப்பைத்தொட்டிகள், குப்பைப் பைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் உள்ளூர் நபரை தற்காலிகமாக தூய்மைப் பணியில் ஈடுபடுத்தலாம். மேலும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான குடிநீர் கேன் வாங்குவது, வாட்டர் டிஸ்பென்சர் அல்லது குடிநீர் பாத்திரத்தை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவது அல்லது பராமரிப்பது, குடிநீர் செலவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும் இந்த தொகையை பயன்படுத்தலாம். இந்த பணத்தை தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இதற்கான செலவுகளுக்கு கடை மேற்பார்வையாளரே பொறுப்பு. அதே நேரத்தில், இந்த பராமரிப்பு நிதியை கடை வாடகை, மின்சாரக் கட்டணம், கட்டிடப் பழுதுபார்ப்பு, மரச்சாமான்கள் அல்லது நிரந்தர உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடை மேற்பார்வையாளரின் சம்பளம் அல்லது படியாகவும் கருதப்படாது. ஒவ்வொரு கடையிலும் இந்த நிதிக்காக தனியாக செலவினப் பதிவேடு பராமரிக்க வேண்டும். செலவு செய்ததற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்களை 3 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது அவை சரிபார்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பராமரிப்பு நிதியில் ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர்வு வழங்க டாஸ்மாக் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல் உயர்வு 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். கடைகளின் அன்றாட சிறு செலவுகளுக்காக 2003-ம் ஆண்டு முதல் சில்லரை செலவின தொகை வழங்கப்பட்டு வருகிறது. அப்போது ரூ.250 ஆக இருந்த தொகை படிப்படியாக உயர்ந்து, 2023-ம் ஆண்டு முதல் ரூ.750 ஆக வழங்கப்பட்டு வந்தது. இனி அந்த தொகைக்கு பதிலாக, கடை அமைந்துள்ள பகுதியைப் பொறுத்து ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை புதிய பராமரிப்பு நிதி வழங்கப்பட உள்ளது.டாஸ்மாக் கடைகள்
குடிநீர் பாத்திரம் வாடகை
செலவின பதிவேடு