டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?

  • சென்னை: "அண்ணே... பில்லுல இருக்குற விலையை விட 20 ரூபாய் அதிகமா கேக்குறீங்களே, இது நியாயமா?" - தமிழகத்தில் உள்ள எந்தவொரு டாஸ்மாக் கடை பக்கமும் நீங்கள் ஒதுங்கினால், தினமும் கேட்கும் ஆகச்சிறந்த சண்டைக் குரல் இதுதான். 'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' மற்றும் எம்ஆர்பியைவிட ஒரு 10 ரூபாய் என 20 ரூபாய் அதிகம் வாங்குவது தொடர்கதையாக இருக்கிறது. பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டுப்பாடி செந்தில் பாலாஜியை அன்று கிண்டல் செய்த இன்றைய முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசைத் தொடர்ச்சியாகக் குடைந்து வரும் ஒரு தீராத தலைவலியாக இருக்கிறது.

    Advertisement

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் தற்போது வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. அதுதான், "டாஸ்மாக் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரம்".

    Advertisement

    டாஸ்மாக் ஊழியர்களை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தாமல், முழுக்க முழுக்க இயந்திரம் மூலமாகவே காலி பாட்டில்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய தொகையை நேரடியாக நுகர்வோருக்கே வழங்கும் இந்த அதிநவீன திட்டம், தற்போது சோதனை முயற்சியில் (Pilot Project) இறங்கியுள்ளது.

    4800 கடைகளில் இது சாத்தியமா? செயல்முறை எப்படி இருக்கும்

    தமிழகம் முழுவதும் சுமார் 4,800-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இத்தனை கடைகளிலும் இந்த இயந்திரத்தை நிறுவுவது சாத்தியமா என்றால், "நிச்சயமாகச் சாத்தியம், ஆனால் சவால்கள் நிறைந்தது" என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

    இதன் செயல்முறை மிக எளிமையானது

    கண்ணாடி பாட்டில் ஸ்கேனிங்

    Advertisement

    நீங்கள் குடித்து முடித்த காலி மதுபாட்டிலை இந்த இயந்திரத்தில் உள்ள துவாரத்தில் செலுத்த வேண்டும். இயந்திரத்தில் உள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்கள் அந்தப் பாட்டிலின் வடிவம், எடை மற்றும் அது டாஸ்மாக் பாட்டில் தானா (பார் கோடு / க்யூஆர் கோடு மூலம்) என்பதைச் நொடியில் ஸ்கேன் செய்யும்.

    பணம் ரீஃபண்ட் பாட்டில் உண்மையானது என இயந்திரம் உறுதி செய்தவுடன், அதற்கான தொகையான ரூ.10 (அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகை) டிஜிட்டல் முறையில் (UPI - GPay/PhonePe மூலம் உங்கள் வங்கி கணக்கிற்கு) அல்லது 'கேஷ் கூப்பனாக' (Cash Coupon) வெளியில் வரும். இந்த கூப்பனை அடுத்த முறை மது வாங்கும்போது பணமாகக் கழித்துக் கொள்ளலாம். இப்படி ஒரு சிஸ்டம் கொண்டுவரலாம்.. அல்லது பணத்தை வாங்கி கொண்டு காயினை வாங்கி கொண்டு செல்லலாம்.

    Advertisement

    பாட்டில் சேகரிப்பு எப்படி

    உள்ளே செல்லும் பாட்டில்கள் உடையாமல் பாதுகாப்பாக இயந்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் வந்தடையும்.

    'பாட்டிலுக்கு 10 ரூபாய்' பிரச்சனைக்கு இது தீர்வு தருமா

    கண்டிப்பாக இது ஒரு மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும். தற்போது பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், "பாட்டில்களைத் திரும்பப் பெற ஆள் இல்லை, லாரி வாடகை ஏறிவிட்டது, உடைந்து போகும் பாட்டில்களுக்கு நாங்கள்தான் பொறுப்பு" என்ற காரணங்களைக் கூறித்தான் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த இயந்திரம் வந்துவிட்டால், பாட்டில்களை வாங்குவதற்கும், கணக்கு வைப்பதற்கும் ஊழியர்களின் தேவையே இருக்காது. வாடிக்கையாளர்கள் தங்களின் காலி பாட்டில்களைத் தாங்களே இயந்திரத்தில் போட்டு ரூ.10-ஐ நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். இதனால், பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில் இருக்கும் 'முறைகேடுகள்' மற்றும் 'ஊழல் கூட்டு' ஓரளவு உடையும். விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இது உதவும்.ஆனால் பாட்டிலுக்கு எம்ஆர்பியைவிட அதிகமாக விற்கிறார்களே அதற்கு தீர்வாக இந்த திட்டம் இருக்காது. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குகிறார்களே அதற்கு தான் தீர்வாக இருக்கு.

    Advertisement

    ஒரு நாளைக்கு 10 கோடி பாட்டில்கள்: நடைமுறைச் சிக்கல் என்ன?

    புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் ஒரு நாளைக்குக் கோடிக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் கேன்கள் விற்பனையாகின்றன (விசேஷ மற்றும் பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு எகிறும்). இவ்வளவு பிரம்மாண்டமான எண்ணிக்கையைக் கையாள்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

    இயந்திரத்தின் கொள்ளளவு

    ஒரு இயந்திரத்தில் அதிகபட்சமாக 500 முதல் 1000 பாட்டில்களை மட்டுமே சேமிக்க முடியும். அப்படியென்றால், ஒரு கடைக்கு 3 முதல் 4 இயந்திரங்கள் தேவைப்படும். மேலும், ஒரு நாளைக்கு நான்கைந்து முறையாவது அந்த இயந்திரத்தில் இருந்து பாட்டில்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

    Advertisement

    பராமரிப்பு மற்றும் மின்சாரம்

    கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அடிக்கடி மின்தடை ஏற்படும். அதற்கு 'பவர் பேக்கப்' வசதி செய்ய வேண்டும். போதை தலைக்கேறிய ஆசாமிகள் இயந்திரத்தை உடைக்காமல் இருக்க, அதற்குத் தனியாகப் பாதுகாப்பு கூண்டுகள் அமைக்க வேண்டிய நிலை வரலாம்.

    உடைந்த பாட்டில்கள்

    பாட்டிலின் வாய் பகுதி உடைந்திருந்தாலோ அல்லது லேபிள் கிழிந்திருந்தாலோ இயந்திரம் ஏற்றுக்கொள்ளாது. அப்போது வாடிக்கையாளர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் மீண்டும் தகராறு வர வாய்ப்பும் உள்ளது.

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதனால் என்ன நன்மை?

    இந்தத் திட்டம் ஊழியர்களின் வேலையைப் பறிக்காது, மாறாக அவர்களின் சுமையைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் எத்தனை காலி பாட்டில்கள் வந்தன, எவ்வளவு உடைந்தன, அதற்கு எவ்வளவு காசு கொடுத்தோம் என்ற கணக்குகளை எழுதி எழுதி ஊழியர்களின் கை ஓய்ந்துவிட்டது. இனி அந்தப் பாரம் அவர்களுக்கு இல்லை. கடைகளுக்குள் காலி பாட்டில்களை மூட்டை மூட்டையாகக் குவித்து வைப்பதால் ஏற்படும் இட நெருக்கடி, துர்நாற்றம் மற்றும் பாட்டில் உடையும்போது ஏற்படும் காயங்கள் இனி ஊழியர்களுக்குத் தவிர்க்கப்படும்.

    திட்டம் எளிதானது இல்லை

    மேலைநாடுகளில் மிக வெற்றிகரமாகச் செயல்படும் இந்த 'ரிவர்ஸ் வெண்டிங்' முறை, தமிழகத்தின் குப்பைக் கூளங்களாக மாறும் மதுபாட்டில்களைத் தூய்மைப்படுத்த உதவும் ஒரு புரட்சிகரமான முயற்சி. ஆனால், "சரக்கு வாங்கவே அலைமோதும்" டாஸ்மாக் கூட்டத்தில், "பாட்டிலைத் திரும்பக் கொடுக்கவும்" நீண்ட வரிசை உருவாகாமல் இருக்க, அரசு போதிய எண்ணிக்கையில், தரமான இயந்திரங்களை நிறுவ வேண்டும். ஆனால் இது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே கசப்பான உண்மை.

    English Summary

    Will installing smart return machines across 4000+ TASMAC shops effectively handle crores of daily empty bottles, eliminate the ₹10 extra charge issue, and reduce the workload for employees?