TATA எலக்ட்ரானிக்ஸ் சைபர் அட்டாக்: டார்க் வெப்பில் 630GB டேட்டா + ஆப்பிள், டெஸ்லா ஆவணங்கள் லீக்!


  • இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் வேகமாக வளர்ந்து வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மீது பெரிய சைபர் அட்டாக் நடந்துள்ளது. இந்நிறுவனத்தின் சில கணினி அமைப்புகள் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடந்ததாக டாடா எலக்ட்ரானிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் டார்க் வெப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது?

    டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது கம்பியூட்டர் அமைப்புகளில் சைபர் அட்டாக் சம்பவம் கண்டறியப்பட்டதாக அறிவித்துள்ளது. சம்பவம் கண்டறியப்பட்ட உடனே பாதுகாப்பதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டதாகவும், நிறுவனத்தின் உற்பத்தி அல்லது வணிக நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    ஆனால், "வேர்ல்ட் லீக்ஸ்" (World Leaks) எனப்படும் ஹேக்கர் குழு, டாடா எலக்ட்ரானிக்ஸிடமிருந்து திருடப்பட்டதாக கூறப்படும் 630 ஜிபிக்கும் அதிகமான தரவுகளை டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளில் 2,04,000-க்கும் மேற்பட்ட பைல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள், டெஸ்லா தகவல்களும் கசிந்ததா?

    இந்த விவகாரத்தில் அதிகம் கவலை அளிக்கும் விஷயமாக இருப்பது, டாடா எலக்ட்ரானிக்ஸின் முக்கிய வாடிக்கையாளர்களான ஆப்பிள் மற்றும் டெஸ்லா தொடர்பான ஆவணங்களும் கசிந்திருக்கலாம் என்ற தகவல் தான்.

    டார்க் வெப்பில் வெளியிடப்பட்ட தரவுகளில் "com.apple.factorydata", "material specification" போன்ற பெயர்களில் பைல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சில ஆவணங்களில் "Apple நிறுவனத்தின் ரகசிய மற்றும் தனியுரிம தகவல்கள்" என்ற குறிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    மேலும், டெஸ்லாவின் மாடல்-வை வாகனத்தில் பயன்படுத்தப்படும் சார்ஜிங் கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்பான ஆவணங்களும், "Trade Secret" எனக் குறிக்கப்பட்ட தொழில்நுட்ப வரைபடங்களும் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள்

    சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஆய்வு செய்த தகவல்களின்படி, தொழில்நுட்ப ஆவணங்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள், ஊழியர்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் இந்தியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களின் பாஸ்போர்ட் நகல்களும் தரவு கசிவில் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது வெறும் தொழில்நுட்ப தகவல் கசிவாக இல்லாமல், தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

    Advertisement

    ஆப்பிள் விசாரணை தொடக்கம்!

    இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக ஆப்பிள் தனிப்பட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா எலக்ட்ரானிக்ஸுக்கு மீட்புத் தொகை (Ransom) கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

    டெஸ்லாவும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    ஆப்பிளின் முக்கிய பார்ட்னர் டாடா

    சீனாவுக்கு வெளியே தனது உற்பத்தி வலையமைப்பை விரிவுபடுத்தும் ஆப்பிளுக்கு, டாடா எலக்ட்ரானிக்ஸ் மிக முக்கியமான கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு டாடா நிறுவனத்தின் ஆலைகளில் தயாரிக்கப்படுவதாக தொழில் வட்டாரங்கள் கூறுகின்றன.

    Advertisement

    தமிழகத்தின் ஓசூரில் அமைந்துள்ள டாடாவின் முக்கிய ஐபோன் உற்பத்தி மையம் தொடர்பான ஆவணங்களும் கசிந்த தரவுகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜாகுவார் லேண்ட் ரோவர்

    கடந்த ஆண்டு டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் பெரிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. அந்த தாக்குதல் காரணமாக ஆறு வாரங்களுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் மீதான தற்போதைய தாக்குதல், உலகளாவிய உற்பத்தி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் தீவிரத்தை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

    எச்சரிக்கை மணி?

    டாடா எலக்ட்ரானிக்ஸ் மீது நடந்த இந்த தரவு கசிவு, இந்தியா உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் முக்கிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    குறிப்பாக ஆப்பிள், டெஸ்லா, இன்டெல், குவால்காம் போன்ற உலகப் பெரும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்கு, சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தகவல் தொழில்நுட்ப பிரச்சனை அல்ல; வணிக நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

    English Summary

    Tata Electronics has confirmed a cyber attack that led to over 630GB of data being leaked on the dark web, including sensitive documents reportedly linked to Apple and Tesla. The breach has raised serious concerns about data security as Tata plays a key role in Apple's India manufacturing operations.