முதல்வர் விஜய் புதிய அலுவலகம்.. 3 மாதங்களில் திறக்கப்படும்.. மாற்றும் பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு!

  • சென்னை: புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அலுவலகம் மாறவுள்ள நிலையில், முதல்வர் அலுவலக வசதிகளை ஏற்படுத்தும் பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    தலைமைச் செயலக வளாகத்தில் இரண்டு கட்டடங்கள் உள்ளன. தற்போது புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டடத்தில் முதலமைச்சர் அலுவலகம் உள்ளது. மற்றொரு கட்டடம் 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை.

    பிரதான கட்டடத்தில் மூன்று தளங்கள் உள்ள நிலையில், இதில் அமைச்சர்களுக்கான அறைகள் உள்ளன. முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் தற்போது புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் நிலையில், காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வரும் முதலமைச்சர் மாலை 5 மணி வரை பணிகளை செய்து வருகிறார்.

    Advertisement

    இந்நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை, வாகன நிறுத்துமிட வசதி குறைபாடு மற்றும் புதிய கட்டடங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின்னணு டெண்டரை வெளியிட்டுள்ளது.

    அதில், "தமிழ்நாடு ஆளுநரின் சார்பில், பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டம்-1 கண்காணிப்புப் பொறியாளர் மூலம் இந்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் பதிவு பெற்ற தகுதியான ஒப்பந்தக்காரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் பிளாக் 1-ல் நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்தும் பணிக்கு ரூ.2.41 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.1.31 லட்சமாகவும், பணியை 3 மாதங்களில் முடிக்கவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பிளாக் 2-ல் நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்தும் பணிக்கு ரூ.2.01 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.1.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பணியை 3 மாதங்களில் முடிக்க வேண்டும்.

    இதேபோல், பிளாக் 3-ல் நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்தும் பணிக்கு ரூ.1.12 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.66 ஆயிரமாகவும், பணிக்கான கால அவகாசம் 3 மாதங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பணிகளுக்கும் பொதுப்பணித்துறையில் பதிவு பெற்ற வகுப்பு-1 மற்றும் அதற்கு மேல் தகுதி பெற்ற கட்டடப் பிரிவு ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

    Advertisement

    ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்கள் மற்றும் படிவங்களை 'tntenders.gov.in' இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் அதே நாளில் மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.

    அறிவிப்பில் ஏதேனும் திருத்தம் அல்லது மாற்றம் செய்யப்பட்டால், அது தமிழ்நாடு அரசின் மின்னணு ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    With Chief Minister Joseph Vijay's office set to shift from Fort St. George to the Namakkal Kavignar Maligai, a tender worth ₹5.54 crore has been floated for works to set up the Chief Minister's office facilities.