சென்னையின் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்க்கு விடிவு காலம் வருகிறது.. தமிழக அரசு அதிரடி

  • சென்னை: சென்னையின் கூவம், அடையாறு ஆறுகள் & பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. ஆறுகளை சீரமைக்க எவ்வளவு செலவாகும், என்ன தொழில்நுட்பம் தேவைப்படும் என விரிவான அறிக்கை தயாரிக்க வேண்டும். ஆறுகளில் கலக்கும் கழிவுநீர் குழாய்களை சுத்திகரிப்பு நிலையத்திற்கு திசை திருப்புதல், படகு போக்குவரத்திற்கான சாத்தியக்கூறுகள், வெள்ள நீரை சேமிக்கும் வழிகள் குறித்து அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். விருப்பமுள்ள நிறுவனங்கள் TNTENDERS.GOV.IN என்ற இணையதளத்தில், வரும் நவ.3 ஆம் தேதி, காலை 11 மணிக்குள் E-TENDER சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    சென்னையில் அடையாறு ஆறு சுமார் 42 கி.மீ நீளமும், கூவம் ஆறு சுமார் 32 கி.மீ நீளமும், பக்கிங்காம் கால்வாய் என்பது பறக்கும் ரயில் வழித்தடம் செல்லும் பாதையில் தான் இருக்கிறது. இந்த மூன்று நீர்வழிப்பாதைகளும் மோசமான ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே
    கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சென்னை தாங்க முடியாத பாதிப்பை சந்தித்தது. அதன்பிறகு சென்னையின் நீர்நிலைகளைச் சீரமைப்பதற்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனாலும் அகற்றவே முடியாத அளவிற்கு சில பகுதிகள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ளன. அதேநேரம் ஒரு கால்வாயில் இருந்து இன்னொரு கால்வாய் செல்லும் நீர்வழிப்பாதைகள், நீரோடைகள் செல்லும் பாதைகளை மட்டும் ஓரளவு அரசு மீட்டெடுத்துள்ளது. சில பகுதிகளில் புதிய நீர்வழிப்பாதைகளையும் உருவாக்கி உள்ளது.

    Advertisement

    எனினும் இன்னும் பல பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே சென்னை நதிகள் மறுசீரமைப்பு நிறுவனம் மூலம் ஆறுகளை மீட்டெடுக்கும் திட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டப்படி ஆறுகளில் கலக்கும் 300-க்கும் மேற்பட்ட கழிவுநீர் குழாய்கள் ஆய்வு செய்யப்படும். கழிவுநீர் ஆறுகளில் கலப்பதைத் தடுப்பதற்கும், கழிவுநீரைச் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்புவதற்கும் தேவையான நடவடிக்கைகள் தான் இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் ஆகும்.

    அதேபோல் ஆறுகளின் இருபுறங்களிலும் தேவைக்கேற்ப தடுப்புச்சுவர்கள் அமைத்தல், நடைபாதைகளை உருவாக்கி ஆக்கிரமிக்காத வண்ணம் மாற்றுவது இரண்டாவது பணியாகும். அதேபோல் ஆற்றங்கரைகளில் இயற்கைச் சூழலை பாதுகாக்கவும், பல்லுயிர்ப் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் பல்லுயிர் பூங்காக்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் அரசு விரும்புகிறது.

    Advertisement

    மழைக்காலங்களில் வெள்ளநீரை சேமிப்பது, நீரின் ஓட்டத்தை முறைப்படுத்துவது மற்றும் வெள்ளப் பாதிப்புகளை குறைப்பது தொடர்பான வழிமுறைகளை ஆய்வு செய்கிறது.. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனம் (TNUIFSL) இதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறுகையில், "சென்னையில் உள்ள ஆறுகளை மீட்டெடுத்து, அவற்றின் சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சென்னை நதிகள் மறுசீரமைப்பு நிறுவனம் (Chennai Rivers Transformation Company Ltd - CRTCL) உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா ஆகிய நீர்நிலைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான அடிப்படைத் திட்ட வரைவை தயாரித்துள்ளது.

    Advertisement

    இந்த திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு, முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காகவே தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    இந்த விரிவான திட்ட அறிக்கையில், ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அவற்றுக்கான செலவின மதிப்பீடு, பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்படும்.

    'Consulting Services for Preparation of DPR Based on Concept Plan for Pilot Areas for Chennai Rivers Transformation Company Ltd' என்ற பெயரில் இந்த ஆலோசனை பணிக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீட்டு தொகை ரூ.23 லட்சம். இதில் சரக்கு மற்றும் சேவை வரியும் அடங்கும்.

    Advertisement

    எப்படி விண்ணப்பிக்கலாம்

    நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஆலோசனைச் சேவைகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் திட்ட மேம்பாட்டு மானிய நிதி மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த டெண்டர் ஆவணங்களை tntenders.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியுள்ள ஆலோசனை நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

    டெண்டர் சமர்ப்பிக்க கடைசி நாள்: 3.11.2026 காலை 11 மணி வரை சமர்ப்பிக்கலாம்

    டெண்டர் திறக்கப்படும் நேரம்: 3.11.2026 அன்று மதியம் 12.30

    English Summary

    A tender has been issued for the preparation of a detailed project report (DPR) to restore the Cooum and Adyar rivers, as well as the Buckingham Canal, in Chennai. The report must outline the estimated costs for the restoration and the specific technologies required for the process.