சென்னை: 3 நாட்களாக பார்க்கிறேன், கேலரியில் ஒரு Secretary கூட இல்லை என அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சட்டசபை கூடியதும் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட கானாங்காடு ஊராட்சி என்பது 8000 பேர் கொண்ட மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சியாகும்
கால்சியம், சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் கடந்த ஓராண்டில் மட்டும் 19 பேர் சிறுநீரக கோளாறால் இறந்திருக்கிறார்கள். அதில் இப்போது கூட டயாலிசிஸ் செய்வோரின் எண்ணிக்கை 15 பேராக உயர்ந்துள்ளது. எனவே சுண்ணாம்பு பிரச்சனையால் மக்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு தொடர்ந்து ஏற்படுகிறது. இதன் சம்பந்தமாக அரசின் கவனத்தை ஈர்க்கிறேன் என்றார். அப்போது முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பேசுகையில், நீங்கள் 110 விதிக்கும் ஜீரோ ஹவருக்கும் வித்தியாசத்தை சொன்னீங்க. இப்ப கேள்வி நேரம் இல்லாததால் நீங்கள் அனுமதி கொடுக்கிறீர்கள். அதற்கு நன்றி! ஆனால் கேலரியை பாருங்க யாராவது ஒரு அரசு அதிகாரியாவது செயலாளராவது இருக்கிறார்களா? சபாநாயகர் வந்து உட்கார்ந்ததும் ரோஸ்டர் முறையில் கேலரியில் செயலாளர் வந்து உட்கார வேண்டும். அது போல் அமைச்சர்களும் வரவில்லை, 2 3 நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை தலைமைச் செயலாளர் வந்து உட்கார்ந்தார். எனவே இனி சபாநாயகர் அமரும் போது யாராவது ஒரு செயலாளரை கேலரியில் அமர சொல்லுங்கள் என கூறிய அவர் அடுத்தது அவருடைய தொகுதி பிரச்சினைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உடனே கேலரியை திரும்பி பார்த்தார். கேலரியில் அந்தந்த மானியக் கோரிக்கையின் போது துறை செயலாளர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அமர்ந்திருப்பர். அது போல் முதல்வர் பேசும் போது அவரது தனிச் செயலாளர்கள் இருப்பார்கள், பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதித்துறை செயலாளர் இருப்பார். இப்படி அந்த கேலரியில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாறி மாறி யாராவது இருந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த 3 நாட்களாக யாருமே இல்லை என தளவாய் சுந்தரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.