’தமிழ்நாடு’ பெயர் முதல்.. தமிழ்நாடு நாள் வரை! செய்தது திமுகதான்! விஜய்க்கு தங்கம் தென்னரசு பதிலடி

  • சென்னை: தமிழ்நாடு நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகவும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியதும் தி.மு.க. அரசுதான் என குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், நமது மாநிலத்திற்கு தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் இந்நாளில் நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, எல்லாவற்றிற்கும் தி.மு.க.தான் காரணம் என்பீர்கள்; ஆனால் இதற்கு உண்மையிலேயே தி.மு.க. அரசுதான் காரணம். 'மெட்ராஸ் மாநிலம்' என்ற பெயரை 'தமிழ்நாடு' என மாற்றியதும், ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்ததும் தி.மு.க. அரசுதான் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பத்தில் பதிவிட்டுள்ள தங்கம் தென்னரசு, "இந்த இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான். தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுவதற்குக் காரணம் என்ன? நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று பல்வேறு அறிஞர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக எவ்வாறு கொண்டாட முடியும்?

    அந்த நாளில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம். எனவே, அந்த நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது சரியல்ல என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அன்னைத் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்டுவதற்காகத் தியாகி சங்கரலிங்கனார் உயிர்நீத்ததும், எண்ணற்றோர் போராடியதும் வரலாறு. "பெயரில் என்ன இருக்கிறது?" என்று தமிழினத்திற்கான தனித்துவமான அடையாளத்தை வழங்க மறுத்த ஆதிக்க மனப்போக்கிற்கு எதிராகப் போராடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசுதான் இந்த மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்டியது.

    Advertisement

    அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்று கருதிய முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 18ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட ஆணையிட்டார்.

    அதே நேரத்தில், தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்க இன்னுயிர் நீத்துப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையில் நவம்பர் 1ஆம் தேதியை "எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்" என அறிவித்ததுடன், அவர்களுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தினார். இனம், மொழி, பண்பாடு காத்தவர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின்" என தெரிவித்துள்ளார்.

    English Summary

    Former minister Thangam Thenarasu says the DMK government renamed Madras State as Tamil Nadu and declared July 18 as Tamil Nadu Day.