சும்மா செலக்ட் பண்ணலை பரந்தூரை.. அவ்வளவு காரணம் இருக்கு! பாயிண்ட்களை அடுக்கிய தங்கம் தென்னரசு!

  • சென்னை: தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அடிப்படையிலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகும்தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது எனவும், இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், அனுமதி நடைமுறைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை கைவிட்டால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகிவிடும் என முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் விரிவாக விளக்கியுள்ளார்..

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு," பரந்தூர் விமான நிலையத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நான் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே விரிவாக விளக்கியிருந்தேன்.

    Advertisement

    சென்னை நகரின் புவியியல் அமைப்பிலேயே, வேறு எந்த இடத்திற்கும் விமான நிலையத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்பது புரியும். விமான நிலையம் அமைத்திட நாங்கள் நேரடியாக சென்று உடனடியாக பரந்தூரைத் தேர்வு செய்துவிடவில்லை.

    தமிழக சட்டப்பேரவை

    பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்த பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஒரு விமானநிலையத்தை அமைப்பதற்கு முன்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு காரணங்களினால் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைக்க இயலாது.

    Advertisement

    பரந்தூர் தேர்வு

    வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. பழவேற்காடு ஏரி போன்ற இடங்கள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் பொருத்தமற்றதாக கருதப்பட்டன. இதைத்தொடர்ந்து, தெற்குப் பகுதியில் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அவை தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை. மேலும் தெற்கில் கல்பாக்கம் அணுமின் நிலையமும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் நிராகரிக்கப்பட்டன.

    விமானநிலையம்

    இதன் காரணமாகவே மேற்குப் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நேரிட்டது. அப்போது பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த இரு இடங்களுக்கும் இடையில் விரிவான ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் பணிகள் துவங்கின. முன்னதாக, ஒரு இடத்தைத் தேர்வு செய்யும்போது தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள், பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா போன்ற அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.

    Advertisement

    பொருளாதார காரணிகள்

    அதேபோல், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் நிலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தப்படும்போது அப்பகுதியில் வாழும் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே தேர்வு செய்யப்படும் இடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை கணக்கிட்டு உறுதிசெய்யவேண்டும். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மேலும் நிலத்தின் விலை உள்ளிட்ட பொருளாதார காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

    மாநில அரசு

    எனவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் மாநில அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, இந்திய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக பரந்தூருக்கே ஒப்புதல் வழங்கியது. அதனால்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தாண்டி தனிநபர் விருப்பத்திற்காக எதுவும் செய்யப்படவில்லை.

    Advertisement

    விவசாய நிலங்கள்

    இப்போது மாற்று இடங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த புதிய இடத்தை ஆய்வு செய்தாலும் இதே போன்ற சிக்கல்கள் எழும். அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும்; அங்கும் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும். அதே மதிப்பீடுகளை மீண்டும் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

    கேள்விக்குறி

    இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், அனுமதி நடைமுறைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை கைவிட்டால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகிவிடும். சிலர் தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவுபடுத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அங்கு இரண்டாவது ஓடுபாதை அமைப்பது எப்படி சாத்தியமாகும்.

    Advertisement

    மீனம்பாக்கம்

    சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டால், மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எத்தனை பேரை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அங்கு ஏற்படும் சமூக மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் இதைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

    நிலம் கையகப்படுத்தல்

    ஏற்கனவே அப்பகுதியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திட்டத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கே பாதகமாக இருக்கும். ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடாகும். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத்தான் நாங்கள் விளக்குகிறோம்" எனக் கூறினார்.

    English Summary

    Thangam Thennarasu said Parandur was selected after extensive technical studies, approvals and comparisons, warning against abandoning the airport project.