சென்னை: சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளைத் தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி எனவும், எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் எங்கே அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவருடன் நேரடியான விவாதத்தையே தவிர்க்கும் அளவுக்கு ஜனநாயகம் பாதாளத்திற்குப் போய் விட்டது என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு, நாள்தோறும் வெளியாகும் கொலை மற்றும் குற்றச் செய்திகள் போதுமான சாட்சியாக இருக்கின்றன.
மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் ஒரு அரசின் அடிப்படைக் கடமை. ஆனால், குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பதிலாக, எதிர்க்கட்சியைத் தாக்குவதற்கான வசனங்களைத் தயாரிப்பதிலேயே இந்த அரசும் முதலமைச்சரும் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது. சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளைத் தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் மீது வீசப்பட்ட அதே பழைய அவதூறுகளை, இன்று அரசியலுக்கு வந்துள்ள புதியவர்களும் பயந்து கையில் எடுக்கிறார்கள் என்றால், கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எங்கள் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கழகத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மிசா சிறைக்கொடுமையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர். ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தனது போராட்ட வரலாற்றால் நிரூபித்த இயக்கம் தி.மு.க. ஆனால், இன்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் எங்கே அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவருடன் நேரடியான விவாதத்தையே தவிர்க்கும் அளவுக்கு ஜனநாயகம் பாதாளத்திற்குப் போய் விட்டது." என கூறியுள்ளார். தமிழக சட்டசபை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது. கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பொறுப்பு வைக்கும் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு விஜய் இன்று பதிலளிப்பேன் என கூறியிருந்தார். அதன்படி இன்று அவை கூடியதும் 2 அரசினர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் திமுக ஆட்சியில் நடந்த குற்றங்கள் குறித்தும் பேசினார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் குறித்து அமலாக்கத்துறை அளித்த அறிக்கையை வாசித்துக் காட்டிய அவர், திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தொடர்ந்து முதல்வரின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து அவையில் அமைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள். பின்பு தங்கள் பதிலளிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.தங்கம் தென்னரசு
மு.க. ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
முதல்வர் விஜய்
சட்டசபை விவாதம்