Vijay: தஞ்சையில் ஏசி கம்ப்ரசர் வெடிப்பு.. 48 மணிநேரத்தில் ஆக்ஷன்.. முதல்வர் விஜய் அறிவித்த நிவாரண தொகை!

  • தஞ்சாவூரில் ஒரு தனியார் உணவகத்தில் ஏசி பழுதுபார்க்கும் பணியின்போது ஏற்பட்ட கம்ப்ரசர் வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

    Advertisement

    மேரீஸ் கார்னர் பகுதியில் நடந்த விபத்து

    தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில் நேற்று ஏசி பழுதுபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது ஏசியின் கம்ப்ரசர் திடீரென வெடித்தது. இந்த வெடிப்பு காரணமாக அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

    இந்த விபத்தில் எலக்ட்ரிக் பணியாளரான ரவி ராஜ் என்பவர் கடுமையாக காயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் ஏசி மெக்கானிக் கணேசன், உணவக ஊழியர் அருண்குமார் மற்றும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்களான கதிரேசன், பிரேம், அஜித்குமார் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் இரங்கல்

    இந்த விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமம் சாந்தபிள்ளை கேட் அருகே உள்ள தனியார் உணவகத்தில் ஏசி பழுதுபார்க்கும் பணியின்போது ஏற்பட்ட கம்ப்ரசர் வெடிப்பில் ரவி ராஜ் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

    நிவாரணம் அறிவிப்பு

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரவி ராஜின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கதிரேசன், பிரேம்குமார், கணேசன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அஜித்குமாருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த விபத்துக்குப் பிறகு வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் ஏசி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது அதிக வெப்பநிலை மற்றும் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக ஏசி கம்ப்ரசர் விபத்துகள் அதிகரித்து வருவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பராமரிப்பு பணிகளின் போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    English Summary

    A tragic AC compressor explosion occurred during repair work at a private restaurant in Thanjavur’s Maris Corner area, claiming the life of young electrician Ravi Raj while injuring five others. Tamil Nadu Chief Minister Vijay has swiftly expressed condolences and announced compensation from the Chief Minister’s Public Relief Fund, highlighting concerns over safety protocols in air conditioner maintenance.