சென்னை: தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது வழி கேட்ட இளைஞரை காவல்துறை தாக்கியதும், அந்த இளைஞர் காவல் துறையினரை திருப்பித் தாக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரஹீமை கன்னத்தில் அறைந்த ஆகாஷ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞரை முதலில் கன்னத்தில் அறைந்த எஸ்எஸ்ஐ ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக உளுந்தூர்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதை ஒட்டி தஞ்சாவூர் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் பிளக்ஸ் பேனரை அகற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காந்திஜி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் இரு பக்கமும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன. அப்போது அவ்வழியே வந்த விளார் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் சாலை மறியல் போராட்டத்திற்கு உள்ளே புகுந்து செல்ல முயன்று உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த மேற்கு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரஹீம் இளைஞரை போராட்டம் முடியும் வரை நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் உதவி ஆய்வாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த காவல் உதவி ஆய்வாளர் இளைஞரை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் சற்றும் யோசிக்காமல் காவல் உதவி ஆய்வாளரை திருப்பி ஓங்கி அறைந்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் உதவி ஆய்வாளர் நிலைத் தடுமாறியுள்ளார். இதனை அடுத்து காவலரை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் வாகனத்தில் ஏற மறுத்தால் உடனடியாக மற்ற காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இளைஞருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் போலீசார இளைஞர் ஒருமையில் பேசியதாகவும், அதனால்தான் லேசாக பலப் பிரயோகம் செய்ததாக காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தான் பணி புரியும் இடத்தில் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக ஆகாஷ் மீது வழக்கு இருப்பதாகவும் கூறி இருந்தனர். அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறக்கூடாது என்பதற்காகத்தான் அவர் மீது பலப் பிரயோகம் செய்யப்பட்டதாக தஞ்சாவூர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவெளியில் பொதுமக்களை தாக்குவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மக்களை அடிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லாத போது அதை செய்த எஸ்எஸ்ஐ ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? அப்படி என்றால் பொது வெளியில் பொதுமக்களை காவல்துறையினர் தாக்கலாமா? அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைக்கலாமா? பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியல் செய்யலாமா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பும், நெட்டிசன்கள் இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக காவல்துறை செயல்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.