சென்னை: தமிழ்நாட்டில் இப்போது முதல்முறையாகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது. விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடம்பிடித்துள்ளனர். இதற்கிடையே கூட்டணி அமைச்சரவை தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளை மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார். இந்த அமைச்சரவையில் யாருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.. இனி வரும் காலங்களில் என்ன சிக்கல் ஏற்படலாம் என்பது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஏற்கவே விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், இன்று 23 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர். தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாகக் கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதற்கிடையே இந்த புதிய அமைச்சரவைப் பட்டியல், அதன் பின் உள்ள அரசியல் சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து சன் நியூஸுக்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "காங்கிரஸ் சார்பாக இரண்டு அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று நேற்றிலிருந்த பேச்சு தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி, இதனை தவெக அமைச்சரவை என்றுதான் பார்க்க வேண்டும். பெரிதும் பேசப்பட்ட விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த விரிவாக்கத்தில் இடம்பெறவில்லை. எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறுகிறார்கள், ஆனால் அது எந்த அளவிற்குச் சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக, இந்த அமைச்சரவைப் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது புலனாகிறது. அதேபோல, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், இப்போது நடப்பது ஒரு கூட்டணி அமைச்சரவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தவெகவிற்குத் தனிப் பெரும்பான்மை இல்லை.. இது ஒரு செயற்கையான பெரும்பான்மை போன்றதுதான். திமுக கூட்டணியில் இருந்து, திமுகவின் ஓட்டு வங்கியால் வெற்றி பெற்றவர்கள்தான் இப்போது தவெகவுக்கு ஆதரவு தருகிறார்கள். மேலும், இந்த அமைச்சரவையில் உள்ள சில முகங்களைப் பார்த்தால், அது அப்படியே அதிமுக அமைச்சரவை போலவே இருக்கிறது. உதாரணமாக, முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அடுத்து கே.ஏ. செங்கோட்டையன் இவர்கள் இருவருமே அதிமுகவில் இருந்து வந்தவர்கள். கூட்டணி அமைச்சரவை என்பது தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய அனுபவம். 1967 காலகட்டத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் இதனைப் பார்க்கிறோம். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல் உலகப் புகழ்பெற்றது. அவர்கள் எந்த அளவிற்கு இணைந்து பணியாற்றுவார்கள் என்பது தெரியவில்லை. ஐந்து எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் அவர்கள் ஐந்து முனைகளில் போராடுவார்கள் அவர்களை வைத்தும் சமாளித்தாக வேண்டும். இந்த அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டால், 'கூட்டணி ஆட்சி என்பது நல்லதுதான்' என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் வெற்றிகரமாகச் செயல்படாமல் போனால், 'கூட்டணி ஆட்சி என்றாலே இப்படித்தான், இது சரியாக வராது' என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுவார்கள். 1977ல் இந்திரா காந்திக்கு எதிராக உருவான ஜனதா கட்சி கூட்டணி அரசு, தேசிய அரசியலில் செய்த குழப்பங்களால், 'கூட்டணி அரசே வேண்டாம்' என்று மக்கள் முடிவெடுத்து மீண்டும் இந்திரா காந்தியைக் கொண்டு வந்தார்கள். அதேபோன்ற பெரிய குழப்பங்கள் இனிமேல்தான் இந்த அமைச்சரவைக்குக் காத்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றம்தான். அதிமுகவினரை தோழமை உணர்வு எனச் சொல்வதெல்லாம் ஒரு வகையான ஏமாற்று வேலைதான். அவர்கள் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து தான் ஆதரவு தந்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. மேலும், அவர்கள் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அந்தக் கணமே பதவியை இழந்துவிட்டனர். இதில் என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே திரும்பிவிடுவார்கள்" என்றார்.தராசு ஷ்யாம்
யாருக்கு முக்கியத்துவம்
கூட்டணி தான்
கூட்டணி
அதிமுக