தமிழக அமைச்சர் வன்னியரசு பேசியிருப்பது தேச விரோதம்.. பாஜக கடும் எதிர்ப்பு.. விஜய்க்கு கோரிக்கை

  • சென்னை: 'தமிழ்நாட்டின் இறையாண்மைக்காக' அமைச்சர் பதவியையும் துறக்க தயார் என்று தமிழக அமைச்சர் வன்னியரசு பேசியிருப்பது தேச விரோத, மற்றும் சட்ட விரோத செயலாகும். இந்திய அரசியலமைப்பு சட்டமானது, இந்தியா மட்டுமே இறையாண்மை கொண்ட நாடு என்று தெளிவாக சொல்கிறது. இந்தியா தன் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியுள்ளனவே தவிர, மாநிலங்களுக்கென இறையாண்மை எதுவும் வழங்கவில்லை என்று பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், அமைச்சரும் விசிக மாநில துணைப் பொதுச்செயலாளருமான வன்னியரசு பேசுகையில், "விசிக என்பது மற்ற சராசரி அரசியல் கட்சிகளைப் போன்றது கிடையாது, இது சமூக விடுதலைக்கான ஒரு பேரியக்கம். தேர்தல் வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் சாதி ஒழிப்பு களத்திலும், தமிழ்த்தேசிய களத்திலும் சமரசமின்றிப் போராடும் இயக்கம். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் போன்ற பதவிகளை விடவும், விடுதலைச் சிறுத்தை என்ற அடையாளமே எங்களுக்கு பெருமை சேர்க்கும் நிரந்தரமான மற்றும் அதிகாரமிக்க பதவி.

    Advertisement

    இன்றைக்கு அமைச்சராக இருக்கும் ஒருவர் நாளை இல்லாமல் போகலாம். எங்களைப் பொறுத்தவரை அமைச்சர் பதவியா அல்லது சாதி ஒழிப்பு களமா என்றால் சாதி ஒழிப்பு களம் தான் முக்கியம். அமைச்சரா அல்லது தமிழ்நாட்டு இறையாண்மையைப் பாதுகாக்கும் களமா என்றால் எங்களுக்குத் தமிழ்நாட்டு இறையாண்மையைப் பாதுகாக்கும் களம் தான் முதன்மையானது" என்று அமைச்சர் வன்னியரசு பேசியிருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "'தமிழ்நாட்டின் இறையாண்மைக்காக' அமைச்சர் பதவியையும் துறக்க தயார் என்று தமிழக அமைச்சர் வன்னியரசு பேசியிருப்பது தேச விரோத, மற்றும் சட்ட விரோத செயலாகும். இந்திய அரசியலமைப்பு சட்டமானது, இந்தியா மட்டுமே இறையாண்மை கொண்ட நாடு என்று தெளிவாக சொல்கிறது. இந்தியா தன் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியுள்ளனவே தவிர, மாநிலங்களுக்கென இறையாண்மை எதுவும் வழங்கவில்லை.

    Advertisement

    மாநில அமைச்சர்களும் பதவியேற்கும் போது 'இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டைக் பேணிகாப்பேன்' என்று அரசியலைமைப்பு சட்டத்தின் மூன்றாவது அட்டவணை மற்றும் சட்டப்பிரிவு 164(3)ன் கீழ் மாநில ஆளுநரிடம் உறுதி மொழி எடுத்து பதவி பிராமணம் செய்து கொள்கின்றனர். எந்த ஒரு மாநிலத்திற்கும் தனி இறையாண்மை கிடையாது. மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் மற்றும் மாநில உரிமைகளே உண்டு.

    அப்படியிருக்கையில். இன்று அமைச்சர் வன்னியரசு 'தமிழ்நாட்டின் இறையாண்மை' என்று பேசியிருப்பது அப்பட்டமான பிரிவினைவாதமேயன்றி வேறல்ல. மேலும், இந்தியாவின் இறையாண்மைக்கே சவால் விடும் போக்கில் வன்னியரசு பேசியிருப்பது சட்ட ரீதியாக பெரும் குற்றமாகும். ஒரு அமைச்சரே இப்படி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்வதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சராக உறுதி மொழி எடுத்ததை மீறி செயல்பட்டுள்ளார் என்ற குற்றத்திற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு.

    Advertisement

    அதே போல் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் , பிரிவினைவாதத்திற்க்கு வழிவகுக்கும் வகையில் பேசியதற்கு வன்னியரசு மீது ஆளுநர்
    அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன்" இவ்வாறு நாராயணன் திருப்பதி எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.

    English Summary

    BJP Chief Spokesperson Narayanan Thirupathi has accused Tamil Nadu Minister Vanniyarasu of engaging in an anti-national and illegal act by stating that he is prepared to give up his ministerial post 'for the sake of Tamil Nadu's sovereignty.'