3 மாநில இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு அறிவிக்கப்படவில்லை!

  • சென்னை: வடமாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தேர்தலுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    Advertisement

    பீகார், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் தலா 1 சட்டசபை தொகுதி காலியானதாக உள்ளது. அத்துடன் தமிழகத்திலும் 7 சட்டசபை தொகுதிகள் காலியாகியுள்ளன. எனவே இவற்றிற்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் வடமாநிலங்களில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அறிவிக்கப்படவில்லை.

    பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதியில் நிதின் நபின் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அது போல் மத்திய பிரதேச மாநிலத்தில் தாடியா சட்டசபை தொகுதி எம்எல்ஏ ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும் குஜராத் மாநிலம் மஞ்சள்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் காலமானதாலும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 13 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், 14 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை, 16ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதியாகும். ஜூலை 30 ஆம் தேதி வாக்குப் பதிவு, ஆகஸ்ட் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் வென்ற நிலையில் பெரம்பூரை வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கை ராஜினாமா செய்ததால் அங்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    அது போல் மற்ற 6 தொகுதிகளிலும், அதாவது மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.

    இவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் முடிவுகள் பிடிக்காததால் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த 7 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வடமாநிலங்களில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The Election Commission announced bypolls for three vacant Assembly constituencies in northern states but did not announce elections for Tamil Nadu.