சென்னை: பிரபல யூடியூபர் விஜே சித்து தனது அலுவலகத்திற்கு வந்த மின் கட்டணம் தொடர்பாக போட்ட மின் கட்டண வீடியோவை எதிர்க்கட்சியான திமுக கையில் எடுத்து தவெக அரசை விமர்சித்து வருகிறது. சாமானியர்கள் தொடங்கி பிரபலங்கள் என பலருக்கும் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் திமுக ஐடி விங்க் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் கையில் எடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வந்துள்ள சமூக வலைதளங்கள் மூலம் பலரும் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள் பலர் நேரிலும், ஆன்லைனிலும் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இந்த விவகாரம் அமைச்சர் நிர்மல் குமாரின் கவனத்திற்கு சென்றது. அதேபோல் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கும் போனது. இதையடுத்து மின் நுகர்வு கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்தப்பட உள்ளது.
கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆய்வை ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப் பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய உள்ளார்கள். அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100, மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்கள். இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் அறிவித்துள்ளார். இதனிடையே விஜே சித்து இந்த ஜூலையில் மின் கட்டணம் வழக்கத்தைவிட மிக அதிகமாக வந்துள்ளதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், அலுவலகத்தில் உள்ள ஸ்விட்சுகளை ஆஃப் செய்தார். மின் கட்டணத்தை பார்த்து மனசே போய்விட்டது. எந்த மாதமும் இல்லாமல் மின் கட்டணம் 62000 ரூபாய் வந்துள்ளது என்று கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. விஜே சித்துவின் வீடியோவை கையில் எடுத்த திமுக ஐடி விங்க் வெளியிட்ட பதிவில், "3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்" என்றார். இந்த பதிவு குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்... முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" இவ்வாறு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.