சென்னை: பரிதாபங்கள் குழுவினர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியையும் நீக்கியுள்ளனர். அந்தச் செயல் நாகரிகமற்றதாக இருந்தபோதிலும், அதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அவர்கள் காட்டிய எதிர்வினை முதிர்ச்சியானதாக இருந்தது; தவறைத் திருத்திக்கொண்டு, தங்கள் மனமார்ந்த மன்னிப்பை வெளிப்படுத்திய அவர்களின் செயலை நாம் பாராட்ட வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் அண்மையில் முதல்வர் விஜய் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிதற்காக கைது செய்யப்பட்டார். அப்போது மார்க்கண்டேயன் மகன் அக்சய் தவெகவை விமர்சித்தும், கைது நடவடிக்கையை விமர்சித்தும் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசும் போது, "மாண்புமிகு முதல்வர் உங்க பையன் தான் உங்க கூட இல்ல. என் அப்பா எனக்காகவும், விளாத்திக்குளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமாக உழைத்து கொண்டிருக்கிறார். அவர் எங்களுடன் இருக்கனும் ஆசைப்படுறோம். இப்படியெல்லாம் பண்ணாதீங்க சார். சட்டமன்றத்துக்குள் எல்லாரையும் அடைச்சு வைக்கனும் என்று இந்த முதல்வர் சொல்றார்.
அப்படியென்றால் அதனை கைப்பற்றி அவர்கள் நினைப்பதை எல்லாம் சட்டமாக இயற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார். தொடர்ந்து ஒரு அவதூறு வழக்கில் எவ்வளவு நேரம் விசாரிக்க முடியும். ஒரு மணி நேரம் விசாரிக்கலாம். பேசுன வீடியோவே ஐந்து நிமிஷம் தான் எனும் போது, 13 மணிநேரம் விசாரித்துள்ளனர். அவர் ஒரு சுகர் பேஷன்ட். இதய பிரச்சனையும் இருக்கிறது. அவரை பயமுறுத்துறாங்க. துப்பாக்கி முனையில் அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதே கருத்தை சொல்ல வேண்டுமென மிரட்டுகிறார்கள்" என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பேசு பொருளானது. கோபி சுதாகரின் பிரபல யூடியூப் சேனலான பரிதாபங்கள் சேனலில் ஆடி மாத பாவங்கள் என்ற வீடியோ அண்மையில் வெளியானது. அந்த வீடியாவில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகன் அக்சய் பேசுவது போல சித்தரித்து வீடியோ இடம் பெற்றிருந்தது. இதை பார்த்த திமுகவினர் கடும் கோபம் அடைந்தனர். பரிதாபங்கள் கோபி சுதாகரை விமர்த்தார்கள் இதன் தொடர்ச்சியாக திமுக முன்னாள் அமைச்சரான டிஆர்பி ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், "தன் தந்தைக்கு எதிராக நடந்த சட்டவிரோதமான ஒரு செயலுக்குப் பிறகு, தனது வேதனையை வெளிப்படுத்த முயன்ற ஒரு சிறுவனை இலக்கு வைத்து பரிதாபங்கள்_ வீடியோ வெளியிட்டிருப்பதைப் பார்த்து மிகவும் அருவருப்படைக்கிறேன். திறமையான இந்தத் திறமைசாலிகளுக்கே நான் மிகப்பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்; ஆனால், ஒரு இளம் சிறுவன் தனது வேதனையான காலத்தில் இருக்கும்போது அவனை வைத்துக் கேலி செய்திருப்பதைப் பார்த்து வெறும் அருவருப்பே மிஞ்சுகிறது.சோகமான வீழ்ச்சி... இதை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்." இவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில் பரிதாபங்கள் சேனலில் விளக்கம் தெரிவித்து பதிவு வெளியிடப்பட்டதுடன், சர்ச்சைக்காட்சிகள் நீக்கப்பட்டன. இதை டிஆர்பி ராஜா வரவேற்றுள்ளார். டிஆர்பி ராஜா இன்று மாலை மீண்டும் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "பரிதாபங்கள் குழுவினர் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு, சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியையும் நீக்கியுள்ளனர். அந்தச் செயல் நாகரிகமற்றதாக இருந்தபோதிலும், அதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அவர்கள் காட்டிய எதிர்வினை முதிர்ச்சியானதாக இருந்தது; தவறைத் திருத்திக்கொண்டு, தங்கள் மனமார்ந்த மன்னிப்பை வெளிப்படுத்திய அவர்களின் செயலை நாம் பாராட்ட வேண்டும். பெரிய திறமையும் செல்வாக்கும் கொண்டவர்களுக்கு, அதற்கேற்ற பெரும் பொறுப்புகளும் வருகின்றன. செல்வாக்கு மிக்க திறமையாளர்கள் தங்கள் பாதையிலிருந்து விலகிச் செல்லும்போது அவர்களுக்குச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நாம் அனைவரும் உறுதி செய்வோம்; அதேவேளையில், சமூகத்தில் தங்கள் செயல்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்றும் நம்புவோம். தெரிந்தோ அல்லது தெரியாமலோ..." இவ்வாறு கூறியுள்ளார்.