₹5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் தவெக அரசு! டிஆர்பி ராஜா புகார்

  • சென்னை: அக்டோபர் 12ல், ஒரு யூனிட் ₹37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்! திமுக ஆட்சியில் வெறும் ₹5.40 முதல் ₹9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று? செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ₹16 முதல் ₹20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது. தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா? என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு இருந்து வருகிறது. கோடைக்காலத்தைக் கடந்தும், 'எல்நினோ' காரணமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மின் தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும் போது 3000 மெகாவாட் மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தியும் போதிய அளவு கைகொடுக்கவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் மின்சார தேவை உச்சமாக இருப்பதால், இரவில் மின்வெட்டு ஏற்படுவது அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமாக மின்தடை ஏற்படுவது தொடர்கிறது. இதனால், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் தற்போது வாடிக்கையாகி விட்டது. அண்மையில் தலைமைச்செயலகத்திலே மின்வெட்டு ஏற்பட்டு, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் அறைகளே இருளில் கிடந்தன.

    Advertisement


    தற்போது மின் தேவை உச்சத்தில் இருப்பதால் அரசு வெளிச்சந்தையில் இருந்தே மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சமாளித்து வருகிறது. அந்த வகையில் மின்தேவையை முழுமையாக சமாளிக்கும் பொருட்டு, வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை அவசரகால அடிப்படையில் கொள்முதல் செய்ய கடந்த வாரம் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் சார்பில் டெண்டர் கோரப்பட்டது.

    அந்த டெண்டரில், ' அக்டோபர் 12-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரையிலான காலத்திற்கு, காலை உச்ச நேரங்களில் 1,500 மெகாவாட் மற்றும் மாலை உச்ச நேரங்களில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அவசரகால அடிப்படையில் கொள்முதல் செய்ய டெண்டர் கோருகிறது' என்று கூறியிருந்தது. இந்த டெண்டரின் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 ரூபாய் வரை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து விண்ணப்பித்திருந்தன. இறுதியாக ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய செய்யும் வகையில் டெண்டரை மின்வாரியம் இறுதி செய்து ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மின்தடை ஓரளவு குறையும் என தெரிகிறது. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    Advertisement

    திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "₹5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் தவெக அரசின் நிர்வாகம்! தேர்தலுக்கு பின் பதவி ஏற்ற தவெக அரசு 2026 மே 23ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்! அதே தவெக அரசு 2026 ஜூன் 25ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது.

    ஆனால் 2026 அக்டோபர் 12ல், ஒரு யூனிட் ₹37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்! திமுக ஆட்சியில் வெறும் ₹5.40 முதல் ₹9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று? செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ₹16 முதல் ₹20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது. தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா? தலைவர் ஸ்டாலின் அவர்களின் திறமையான திராவிட மாடல் 'திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன !

    Advertisement

    இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு? மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை ! தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் !
    மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்? மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட
    முடியுமா?" இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

    English Summary

    The TVK government is purchasing electricity at a cost of ₹35, even though it could be produced for ₹5! After assuming office following the election, the TVK government questioned the previous DMK administration, accusing it of procuring electricity at an exorbitant price.