சென்னை பழவந்தாங்கலில் தேர்தல் தோல்வியால் தி.மு.க. நிர்வாகி விபரீத முடிவு.. வீட்டில் இருந்த கோலம்

  • சென்னை பழவந்தாங்கல் நேரு காலனி பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் தி.மு.க.வின் 164-வது வட்ட செயலாளராக நீண்ட காலமாக இருந்து வந்தார். இவரது மனைவி சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தின் 164-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். கடந்தஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4 ம் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக தோல்வியை தழுவியது. தவெக 108 இடங்களில் வென்றதுடன், திமுக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்து வருகிறது. தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்த தி.மு.க. நிர்வாகி தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

    Advertisement

    திமுக நிர்வாகி

    சென்னை பழவந்தாங்கல், நேரு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 56). இவர் தி.மு.க.வின் தீவிர தொண்டராகவும், கட்சியின் 164-வது வட்ட செயலாளராகவும் நீண்ட காலமாகப் பொறுப்பு வகித்து மக்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்கியவர். ஆலந்தூர் நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் கவுன்சிலராகப் பதவி வகித்து அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு நற்பணிகளைச் செய்துள்ளார். இவரது மக்கள் பணியைத் தொடர்ந்து, தற்போது இவரது மனைவி தேவி ஏசுதாஸ் சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தின் 164-வது வார்டு மாமன்ற உறுப்பினராக (கவுன்சிலர்) இருந்து வருகிறார்.

    Advertisement

    கட்சிப் பணியை முடித்துவிட்டு வந்தவர்

    சம்பவத்தன்று இரவு, நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராகத் தி.மு.க. சார்பில் நடத்தப்படவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஏசுதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். "போராட்டம் மிக முக்கியமானது, எனவே நமது வார்டைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கட்டாயம் கருப்பு சட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்" என்று நிர்வாகிகளிடம் அக்கறையுடன் அறிவுறுத்திவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

    கதவை உடைத்துப் பார்த்த குடும்பத்தினர்

    வீட்டிற்கு வந்த ஏசுதாஸ் தனது அறைக்குச் சென்று உறங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் அவரது மனைவி தேவி ஏசுதாஸ், கணவர் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை நீண்ட நேரமாகப் பலமுறை தட்டியுள்ளார். ஆனால், உள்ளே இருந்து எவ்வித பதிலும் வரவில்லை, கதவும் திறக்கப்படவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர், உடனடியாகத் தனது மகன்களை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அறையின் கதவை பலவந்தமாக உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையில் இருந்த மின் விசிறியில் ஏசுதாஸ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அலறித் துடித்தனர்.

    Advertisement

    போலீஸ் விசாரணை

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழவந்தாங்கல் காவல்துறையினர், ஏசுதாஸின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஏசுதாஸ் கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. கட்சி மற்றும் தேர்தல் தோல்வி குறித்து அவர் தனது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அடிக்கடி மிகுந்த வருத்தத்துடன் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் இதுதொடர்பாகக் குடும்பத்தினருடன் ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே மிகுந்த விரக்தியுடன் அறைக்குச் சென்ற அவர், இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    முக்கிய அறிவிப்பு (தற்கொலை தடுப்பு எண்கள்

    மன அழுத்தம், தற்கொலை எண்ணம் அல்லது ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்தால், தனிமையில் வருந்தாமல் உடனடியாக உதவிக்குத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன:

    ஹெல்ப்லைன் (சினேகா): 044-24640050 (24 மணி நேரமும் செயல்படுகிறது)

    தமிழக அரசின் மனநல உதவி எண்: 104

    வழிகாட்டி (Vandrevala Foundation): 9999 666 555

    English Summary

    The wrong step taken by a DMK functionary in Chennai's Palavanthangal following an election defeat