சென்னை: கடந்த 10 மாதங்களில், தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் எடுக்கப்பட்ட சில முடிவுகள், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழின் புலனாய்வு அறிக்கை தெரிவித்து இருந்தது.
மொத்தம் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக இந்த நாளிதழ் செய்தி வெளியிட்டது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பெயர்களை நீக்குவது, வாக்காளர் தரவுகளை நிர்வகிக்கும் மென்பொருள் உள்ளிட்ட விவகாரங்களில் இருவரும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இது இந்திய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, தேர்தல் ஆணையம் தனது முடிவுகள் அனைத்தும் ஒருமித்தமாக எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. இப்படி தேர்தல் ஆணையம் எந்த பிரச்சினையும் இல்லை என்று மூடி மறைத்தாலும் இன்று நடந்த பல்வேறு விஷயங்களை வைத்து பார்க்கும் போது தேர்தல் ஆணையர்களுக்கும் முரண்பாடு இருப்பது உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. அதாவது, தேர்தல் ஆணையம் பெயரில் வெளியிடப்பட்ட மேற்கூறிய அறிக்கை தேர்தல் ஆணைய துணை இயக்குநர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தி தவறு என்றால், அதை ஏன் வெளிப்படையாக தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று வட இந்திய சேனல்கள் இன்று காலை முதலே பிரேக்கிங் செய்திகளாக வெளியிட்டு வந்தன. ஆனால், அப்படியான ஒரு நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. இதை வைத்து பார்க்கும் போது, தேர்தல் ஆணையர்கள் இடையே சமரசம் ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவே கருதப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் உள்ளனர். இவர்களின் தலைமையில்தான் தேர்தல் ஆணையம் இயங்கி வருகிறது. 3 தேர்தல் ஆணையர்களில் 2 பேர் ஒரு விஷயத்தில் உடன்பட்டால் பெரும்பான்மை முடிவு செல்லும் என்ற விதியின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் நடைமுறை உள்ளது. எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தமிழ்நாடு உள்பட 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடைபெற்றன. பீகாரில் முதல் கட்டமாகவும், மேற்கூறிய மாநிலங்களில் 2-ஆம் கட்டமாகவும், மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் இந்த பணி நடைபெற்று வருகிறது. எஸ்.ஐஆர் பணிகள் மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரக்கூடிய நிலையில், தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு தெரியாமலேயே, தேர்தல் ஆணையத்தில் பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், புதிய வாக்காளர் பதிவுக்காக பயன்படுத்தப்படும் படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது என 2 தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனைக் கடிதங்கள் எழுதியதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு கட்டுரையில் கூறப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதற்கிடையே, வேறுபாடுகள் நிலவுவதாக எழுந்த விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்த பணி உள்பட அனைத்து முடிவுகளும் தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த கருத்துடனே செயல்படுகின்றன. தேர்தல் ஆணையர்களின் 3 கமிஷனர்கள் மட்டுமல்ல, கமிஷனின் ஒவ்வொரு அதிகாரியும் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்காக தங்கள் ஆலோசனைகளை வழங்க முழு அதிகாரம் பெற்றவர்கள். மாறுபட்ட கருத்துகள் ஏற்படுவது இயல்பானதே. சமீபத்திய மாதங்களில், தேர்தல் கமிஷன் ஏராளமான முடிவுகளை எடுத்துள்ளது" என்று கூறியிருந்தது.3 விஷயங்கள் என்னென்ன?
தேர்தல் ஆணையம்
10 மாதங்களில் 14 முறை
தேர்தல் ஆணையம் விளக்கம்