சென்னை: தேவர் ஜெயந்தியையொட்டி அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் விஜய் பசும்பொன் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு சென்று விஜய் மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மட்டும் நேரில் சென்று மரியாதை செலுத்தி இருந்த சூழலில், நடப்பாண்டில் விஜய் நேரடியாக செல்ல இருப்பது விவாதமாகி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா அந்த சமூக மக்களிடையே விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி அன்று 144 தடை விதிக்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இதனால் தென் மாவட்டங்களில் பரபரப்பான சூழல் நிலவும்.
அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள். ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வகையான திருவிழாக்களும் நடைபெறும். இந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி வழக்கம் போல் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியன்று முதல்வர் விஜய் பசும்பொன் வந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நேரில் வந்து மரியாதை செலுத்த உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தவெகவின் கொள்கைத் தலைவரான பெரியார் சிலைக்கு மட்டுமே இதுவரை விஜய் நேரில் ஒரேயொரு முறை சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார். மற்றபடி தவெக அலுவலகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களின் புகைப்படங்களும் மலர் தூவி மரியாதை செலுத்துவதும் தான் விஜய்யின் வழக்கம். ஆனால் திடீரென தேவர் ஜெயந்திக்கு நேரில் வருவது விவாதமாக இருக்கிறது. கடந்த தேவர் ஜெயந்தியின் போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். ஆனால் இம்முறை விஜய் நேரடியாக வருவதன் பின்னணியில் சில சமூக கணக்குகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது.